அநுர அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த அலி சப்ரி

Ali Sabry
By Fathima Jan 08, 2026 05:23 AM GMT
Fathima

Fathima

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய உரிமைகளை ரத்து செய்யும் அரசின் தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் அலி சப்ரி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்த தீாமானம் பொருளாதார அவசியத்தால் எடுக்கப்பட்ட முடிவல்ல எனவும் மக்களின் கோபத்தை திருப்திப்படுத்தும் அரசியல் ரீதியான முடிவு மட்டுமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஓய்வூதியம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியங்களுக்கு செலவாகும் தொகை மிகச் சிறியது எனவும், அது நாட்டின் பொருளாதாரத்தை சீர்செய்யவோ, பாதீட்டு பற்றாக்குறையை குறைக்கவோ, பொது சேவைகளை மேம்படுத்தவோ எந்த வகையிலும் உதவாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அநுர அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த அலி சப்ரி | Ali Sabry Speech About Government

இந்த முடிவுக்கு உண்மையான பொருளாதார நோக்கம் எதுவும் இல்லை. இது தற்காலிக அரசியல் லாபத்திற்காகவும், மக்கள் கோபத்தை பயன்படுத்துவதற்காகவும் எடுக்கப்பட்ட தீர்மானம் எனவும் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் என்பது மரியாதையுடன் வாழ்க்கையை நடத்தும் ஒரே ஆதாரமாக இருந்ததாகவும், அதை ரத்து செய்வது ஊழலை தண்டிப்பதல்ல, பதவியில் இருக்கும்போது செல்வம் சேர்க்காதவர்களை தண்டிப்பதாகும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

அதிகாரம் தவறாக பயன்படுத்தியவர்களுக்கு ஓய்வூதியம் தேவையில்லை. நல்ல வருமானம் உள்ளவர்களுக்கும் தேவையில்லை. கட்சி பாதுகாப்பில் இருப்பவர்களுக்கும் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

ஆனால் நேர்மையாக சேவை செய்து, குறைந்த வசதியுடன் பதவியிலிருந்து வெளியேறியவர்களுக்கு அது தேவை என குறிப்பிட்டுள்ளார்.

கட்சி அமைப்பு

மிகுந்த செல்வம் உள்ளவர்கள், பாரம்பரிய செல்வம் கொண்டவர்கள் அல்லது கட்சி அமைப்புகளால் நிரந்தரமாக ஆதரிக்கப்படுபவர்கள் மட்டுமே அரசியலில் ஈடுபடும் நிலை உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அநுர அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த அலி சப்ரி | Ali Sabry Speech About Government

இதனால், பொருளாதார வசதி இல்லாத திறமையான, சாதாரண பொதுமக்கள் அரசியலில் நுழைவதை தவிர்ப்பார்கள், இது சீர்திருத்தத்தை வலுப்படுத்தாமல் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் என அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கை அரசியல் பரப்பினை சுருக்கி, ஒரே கட்சி ஆதிக்க கலாச்சாரத்தை மெதுவாக ஊக்குவிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முழுமையான ரத்துக்கு பதிலாக, ஓய்வூதியத்தை விருப்பத் தேர்வாகவும், விண்ணப்பம் மற்றும் பரிசீலனைக்கு உட்படுத்தியும் வழங்கியிருக்கலாம் என்பது ஒரு நியாயமான அணுகுமுறை என அலி சப்ரி தெரிவித்துள்ளார்.