கிண்ணியாவில் சாதனை படைத்த மாணவிகள் கௌரவிப்பு!
கிண்ணியா (Kinniya) அல் - ஹிரா மகளிர் மகா வித்தியாலயத்தில், இவ்வருடம் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில், விஞ்ஞானம் மற்றும் கலை பிரிவுகளில், சித்தியடைந்து சாதனை படைத்த மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
குறித்த இந்த நிகழ்வானது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (01) மாலை பாடசாலை முன்றலில் நடைபெற்றது.
சாதனை நிகழ்வு
உயிரியல் விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு, மாணவிகள் பரீட்சை எழுதிய முதலாவது சந்தர்ப்பத்திலே, இவ்வாறு மாவட்டத்திலே முதலாம் இடத்தையும், ஆறாவது இடத்தையும் பெற்று இந்தப் பாடசாலை சாதனை படைத்திருக்கிறது.
அதன்படி, மின்ஹா என்ற மாணவி மாவட்டத்தில் முதலாம் இடத்தையும், இனாசிரின் என்ற மாணவி மாவட்டத்தில் ஆறாம் இடத்தையும் பெற்று இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.
அதேவேளை, முதல் தடவையாக உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 13 மாணவிகள் பரீட்சைக்கு தோற்றி, அதில் பத்து மாணவிகள் சித்தி அடைந்திருந்தனர்.
கௌரவிக்கும் நிகழ்வு
இந்நிலையில் குறித்த மாணவிகளுக்கு கற்பித்த ஆசிரியர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன், இந்த வருடம் கலைத் துறையில், சாதனை படைத்த 10 மாணவிகளும், இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், இந்த நிகழ்வின் அதிதிகளாக கலந்து கொண்ட, வலயக்கல்விப் பணிப்பாளர் Z.M.M.நளீம், பிரதி கல்வி பணிப்பாளர் N.M.நாசிர் அலி மற்றும் பரக்கா செரட்டியின்(Barakah Charity) நிறைவேற்று பணிப்பாளர் சட்டத்தரணி M.A.M.முஜீப் ஆகியோர் இவர்களுக்கான இவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்தனர்.
இந்தப் பாடசாலையில் விஞ்ஞான பிரிவை ஆரம்பித்து, பாடசாலையின் கல்வி வளர்ச்சியில், அயராது உழைத்த அதிபர் மர்ஹூம் எம்.எஸ் நசூர்தின் மறுமை வாழ்வின் ஈடேற்றத்திற்காக, விசேட துஆ பிரார்த்தனையும் இங்கு இடம்பெற்றமை முக்கிய அம்சமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |