கல்முனை சட்டத்தரணிகளின் முதல் பெண் தலைவி தெரிவு
கல்முனை(Kalmunai) சட்டத்தரணிகள் சங்க வரலாற்றில் முதல் பெண் தலைவியாக சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஆரிகா சாரிக் காரியப்பர்(Aarika Shariq Kariapper) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கல்முனை நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று(19) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 2025/26ஆம் ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது. இதன் போது கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2025/26 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா சாரிக் காரியப்பர் தேர்தல் மூலமாக தெரிவாகியுள்ளார்.
முதல் பெண் தலைவி
இலங்கையின் 60 வருட வரலாற்றைக் கொண்ட கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் வரலாற்றில் முதல் தடவையாக 2025/26ம் ஆண்டுக்கான சங்கத் தலைவராகவும் முதல் பெண் தலைவியாகவும் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், இந்த தெரிவுப்போட்டிக்கான தேர்தலில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான யூ.எம்.நிசார் மற்றும் ஐ.எல்.எம்.றமீஸ் ஆகியோர் போட்டியிட்டனர்.
ஆயினும், இதில் சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் அதிக வாக்குகளைப் பெற்று கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் முதலாவது பெண் தலைவராக தெரிவு செய்யப்பட்டதுடன், தொடர்ந்து செயலாளர், பொருளாளர், உள்ளிட்ட இதர பதவி நிலைகளுக்கும் ஏனைய நிருவாகிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
புது தலைமைத்துவம்
மேலும், புதிய தலைவரான சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா சாரிக் காரியப்பர், கிழக்கு மாகாணத்திலேயே பிராந்திய சட்டத்தரணிகள் சங்கங்களில் தலைவராக தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் சட்டத்தரணியாக வரலாற்றில் இடம் பெறுகின்றார் என்பதுடன் கல்முனை மஹ்மூது மகளீர் கல்லூரி மற்றும் இலங்கை சட்டக்கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியுமாவார்.
அத்துடன் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவிகள் சங்க செயலாளரான ஆரிகா சாரிக் காரியப்பர், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





