பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அதிக மழை பெய்தால், நீர்மட்டம் உடனடியாக உயரக்கூடும் என்று நீர்ப்பாசனத்துறை தெரிவித்துள்ளது.
தற்போதைய வானிலை குறித்த சிறப்பு ஊடக சந்திப்பில் இன்று (08) காலை பங்கேற்ற நீர்ப்பாசனத் துறையின் பொறியியலாளர் எல்.எஸ்.சூரியபண்டார இதனை தெரிவித்துள்ளார்.
நீர்மட்டம்
மேலும் தெரிவிக்கையில், தற்போதைய வானிலை முன்னறிவிப்பின்படி, பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

இருப்பினும், பல நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் தற்போது அபாய அளவை விட குறைவாக இருப்பதாகவும், நீர்ப்பாசன கணக்கீடுகளின்படி, நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவில் 80% - 90% வரை பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது, கிழக்கு, வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களை உள்ளடக்கிய நீர்த்தேக்கங்களில் கசிவு ஏற்பட்டு வருகின்றது.
இதற்கமைய, 73 முக்கிய நீர்த்தேக்கங்களில் 25 நீர்த்தேக்கங்களில் தற்போது நீர் கசிந்து வருவதாகவும், 24 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களிலும் இந்த நிலை தொடருவதாகவும் பொறியாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
நேற்று (07) மற்றும் இன்று (08) வான் கதவுகள் திறக்கப்பட்டு, நீர்த்தேக்கங்களில் கணிசமான அளவு இடம் பராமரிக்கப்பட்டாலும், கடுமையான மழை பெய்தால் வான் கதவுகளை மேலும் திறக்க வேண்டியிருக்கும் என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், மாதுருஓயா, கலாஓயா மற்றும் களுகங்கை, மகாவலி உள்ளிட்ட 6 நீர்த்தேக்கங்கள் தற்போது நிரம்பி வழிவதாகவும்,.மகாவலி அதிகாரசபையின் கீழ் உள்ள நீர்த்தேக்கங்கள் சுமார் 95% நீர் கொள்ளளவைக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 59% என்று மகாவலி அதிகாரசபையின் நீர் மேலாண்மை செயலகத்தின் இயக்குநர் பொறியாளர் நிலந்த தனபால கூறியுள்ளார்.