காஸா போரால் இஸ்ரேலுக்கு எழுந்துள்ள பாரிய சிக்கல்! தொடரும் மக்களின் அஞ்சல் கோரிக்கை
இஸ்ரேலில் (Israel) சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், அந்நாட்டு மக்களிடையே அதிகரித்து வரும் அச்சம் தொடர்பில் உண்மைகள் வெளிவந்துள்ளன.
இந்த செய்தியினை, இஸ்ரேலின் சேனல் 12 என்ற செய்தி ஊடகம் ஆய்வறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அதில், காஸா போரினால் சர்வதேச சமூகத்தின் எதிர்மறையான அணுகல் மற்றும் விமர்சனங்கள் காரணமாக 56 சதவீத இஸ்ரேலிய மக்கள் இனி வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாமல் போகலாம் என்று அஞ்சுவதாக தெரியவந்துள்ளது.
மக்களின் நிலை..
மேலும், இஸ்ரேல் - ஹமாஸ் போர் மற்றும் பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் உலகளவில் இஸ்ரேலின் பிம்பத்தில் ஏற்பட்ட தாக்கத்தை இந்த ஆய்வறிக்கை பிரதிபலிக்கிறது.
உலகளாவிய விமர்சனங்கள் காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்ல பயப்படுவதாக ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 56 சதவீதம் பேர்கள் கூறியுள்ளனர்.
காஸா மக்களின் தற்போதைய நிலையால் பல நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிராக அதிகரித்து வரும் எதிர்ப்பு இஸ்ரேலியர்களின் பயணத்திட்டங்களைப் பாதிக்கக்கூடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
ஆனால், 40 சதவீதம் பேர்கள் தங்களுக்கு அப்படிப்பட்ட கவலை இல்லை என்றும், சர்வதேச விமர்சனங்கள் தங்கள் வாழ்க்கையை ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளனர்.
உளகளவிலான எதிர்வினை
இஸ்ரேலுக்கு எதிராக சில நாடுகள் மற்றும் அமைப்புகளால் உருவாக்கபப்ட்டுள்ள BDS இயக்கம் இந்த அச்சத்தை அந்த மக்களிடம் விதைத்துள்ளது.
இந்த இயக்கத்தின் செயற்பாடுகள் தங்கள் உலகளாவிய பயணங்களை மட்டுப்படுத்தக்கூடும் என்று பல இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்.
ஹமாஸ் படைகளை ஒழிப்பதாக கூறி காஸாவில் முன்னெடுக்கப்படும் இஸ்ரேலின் கொடூர இராணுவ நடவடிக்கைகளும், இதனால் கொன்று குவிக்கப்படும் அப்பாவி மக்களும் உலகளவில் கடுமையான எதிர்வினைகளைத் தூண்டியுள்ளன.
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச் சபையில் காஸாவில் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஆதரவாக பல நாடுகள் வாக்களித்தன.
இந்தியா போன்ற சில நாடுகள் வாக்களிக்காமல், வழமைக்கு மாறாக இஸ்ரேல் ஆதரவு நிலையை எடுத்தன. இது தவிர, ஈரான் மற்றும் சிரியா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களையும் பல நாடுகள் கண்டித்துள்ளன.
அரசியல் ஆதாயம்
இந்த சம்பவங்கள் இஸ்ரேலின் சர்வதேச பிம்பத்தை பாதித்துள்ளன, இது சாதாரண இஸ்ரேலியர்களின் மனநிலையையும் பாதித்துள்ளது.
வெறும் அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே, அமெரிக்க ஆதரவுடன் பிரதமர் நெதன்யாகு காஸாவில் கொடூர நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இஸ்ரேல் மக்களில் பெரும்பாலானோர் நம்பத்தொடங்கியுள்ளனர்.
மட்டுமின்றி, உலகளாவிய விமர்சனங்கள் காரணமாக சில நாடுகள் விசா விதிகளை கடுமையாக்கவோ அல்லது நுழைவு மறுக்கவோ நடவடிக்கை எடுக்கலாம் என்று சில இஸ்ரேலியர்கள் அஞ்சுகின்றனர்.
பிரதமர் நெதன்யாகுவின் அரசியல் ஆதாய நடவடிக்கைகளால் தங்கள் பொருளாதாரம் மற்றும் தனிப்பட்ட சுதந்திரங்களில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று சில இஸ்ரேலியர்கள் அஞ்சுகிறார்கள்.
நெதன்யாகுவால் உலக அரங்கில் தங்கள் அடையாளம் மற்றும் ஏற்றுக்கொள்ளல் சிக்கலில் இருப்பதாக இஸ்ரேலிய மக்கள் கவலைப்படுகிறார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |