450 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூன்றாக பிரிக்கப்பட்டு வெளிநாட்டு விநியோகஸ்தர்களுக்கு வழங்க திட்டம்
நாட்டிலுள்ள 450 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தலா 150 வீதம் மூன்றாக பிரிக்கப்பட்டு புதிய வௌிநாட்டு எண்ணெய் விநியோகத்தர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஒரு மாதத்திற்குள் புதிய விநியோகத்தர்கள் இலங்கையில் வர்த்தக செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று முற்பகல் கொழும்பு மன்றக் கல்லூரியில் எரிபொருள் நிலைய உரிமையாளர்களை சந்தித்த போதெ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புதிய விநியோகத்தர்களுக்கான சந்தைப்படுத்தல் பிரதிநிதிகளை ஒதுக்குவது, பயன்படுத்தப்படவுள்ள இயந்திரங்களை வகைப்படுத்துவது,
புதிய உடன்படிக்கைகள், விலை சூத்திரம், புதிய விநியோகத்தர்களுக்கான நன்மைகள், சந்தைப்படுத்தல் பிரதிநிதிகளுக்கு கிடைக்கும் வருமானம், அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
அமைச்சரிடம் விடயங்களை கேட்டறிவதற்கு ஊடகங்கள் முயற்சித்தாலும், அவர் பதிலளிக்கவில்லை. எவ்வாறாயினும், எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இன்று நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பாக தௌிவுபடுத்தினார்.
”இன்னும் ஒரு மாதத்திற்குள் நடைமுறைக்கு வரும். எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவதற்காக மூன்று நிறுவனங்களுடன் உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளோம்.
அதில் இரண்டு நிறுவனங்கள் இதுவரை விருப்பம் தெரிவித்துள்ளன. விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவது தொடர்பிலேயே இன்று கலந்துரையாடினோம்”என அவர் குறிப்பிட்டார்.
சீனாவின் Sinopec, அமெரிக்காவின் R.M.Parks, அவுஸ்திரேலியாவின் United Petroleum ஆகிய மூன்று நிறுவனங்கள் இலங்கையின் பெட்ரோலிய சந்தைக்குள் பிரவேசிக்க விருப்பம் தெரிவித்துள்ளன.
இந்த நிறுவனங்களுக்கு பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகிக்கும் தலா 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வீதம் 450 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்கவுள்ளதுடன், புதிதாக 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிக்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.