மட்டக்களப்பில் 30 போராட்டக்காரர்கள் விடுதலை
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் மயிலத்தமடு - மாதவனை மேச்சல்தரை நிலப்பிரச்சினைக்கு தீர்வு கோரி, வீதி மறியலில் ஈடுபட்டதற்காக ஏறாவூர் பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
இந்த வழக்கு, நேற்று (20) ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் விசாரணைக்கெடுக்கப்பட்டபோது, சந்தேகநபர்களான 30 பேரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
வழங்கப்பட்ட தீர்ப்பு
கடந்த 2023 அக்டோபர் மாதம் 8ஆம் திகதி மட்டக்களப்பு - செங்கலடி பகுதிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகையின் போது கொம்மாதுறை பகுதியில் - மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 30 சந்தேகநபகளுக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
வீதிப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தமை, முறைகேடாக ஆட்களை தடுத்து வைத்தமை, தேசிய வீதி சட்டத்தினை மீறியமை ஆகிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த 30 பேருக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரினால் ஏறாவூர் சுற்றுலா நிதவான் நீமன்றில் வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வந்தது.
குறித்த வழக்கு மீதான விசாரணையில் சாட்சியங்களிடம் வழக்கினை தொடர்ந்து கொண்டுசெல்வதற்கான மேலதிக ஆதாரங்கள் இல்லாததன் காரணமாக இலங்கை தண்டனை சட்டக்கோவை 186இன் பிரகாரம் நீதவானுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கினை முடிவுறுத்தியதுடன் குற்றச்சாட்டப்பட்ட 30 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


