நோயை குணப்படுத்தும் ஸம்ஸம் தண்ணீர்
மக்காவில் உள்ள ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வற்றாத கிணற்றிலிருந்து பெறப்படுகின்ற நீரே ஸம்ஸம் நீர் ஆகும்.
ஸம்ஸம் நீரானது எல்லா நீர்களையும்விடத் தலையாயதும் மிகுந்த சிறப்பும் உயர்வும் கொண்டதாகும். உள்ளங்களுக்கு மிக விருப்பமானதும் விலை உயர்ந்ததும் மக்களிடம் மிக உயர்வானதும் ஆகும்.
அக்கிணறானது ஜிப்ரீல்(அலை) அவர்களின் கால் எத்துதலால் உருவானதாகும், இஸ்மாயீல்(அலை) அவர்கள் முதன்முதலாக நீர் பருகிய இடமாகும்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ்(ரளி) அவர்கள் அறிவித்துள்ளதாவது,
ஸம்ஸம் நீர் எதற்காக குடிக்கப்படுகிறதோ அதற்காக உள்ள நிவாரணம் ஆகும்
என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
அதாவது, நீங்கள் அதனை நிவாரணத்துக்காகப் பருகினால் நிவாரணத்தைப் பெறுவீர்கள். நீங்கள் அதனை அல்லாஹ்விடமிருந்து பாதுகாவல் தேடுவதற்காகப் பருகினால், அல்லாஹ்விடமிருந்து பாதுகாவல் பெறுவீர்கள். நீங்கள் அதைத் தாகத்துக்காகப் பருகினால் தாகம் தீர்க்கப்படுவீர்கள்.
இந்தத் தண்ணீர் அருள் வளம் (பரக்கத்) நிரம்பியதாகவும் உணவாகவும் நோய்களுக்கு நிவாரணமாகவும் இருக்கின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபியவர்கள் இந்த நீரை மிகவும் விரும்புவார்கள். மதீனாவில் இருந்தபோது இந்த நீரைக் கேட்டு மக்காவுக்கு ஆள் அனுப்புவது அவர்களின் வழக்கம்.
சுஹைல் இப்னு அம்ருக்குப் பின்வருமாறு கடிதம் எழுதினார்கள், ‘எனது இந்தக் கடிதம் உமக்கு இரவில் கிடைத்துவிட்டால், நீ பகல்பொழுதை அடைவதற்குள் ஜம் ஜம் நீரை அனுப்பிவிட வேண்டும். கடிதம் பகலில் கிடைத்தால், மாலைப்பொழுதை அடைவதற்குள் நீரை அனுப்பிவிட வேண்டும். தாமதம் செய்துவிடாதே’ என்று குறிப்பிடுகிறார்.
சுஹைல் இரண்டு தண்ணீர்ப் பைகள் நிறைய நீரை நிரப்பி அவற்றை ஓர் ஒட்டகத்தில் வைத்து அனுப்பி வைத்ததாக ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
