தண்ணீர் உணவாகுமா?
தண்ணீர் தான் உயிரினங்கள், தாவரங்கள் ஆகியவை உயிரோடு இருப்பதற்கான அடிப்படையாகும்.
மேலும் ஓர் உயிரின் அடிப்படை மூலக்கூறுக்கு நிகரானது தண்ணீர் தான் என்பதில் சந்தேகமே இல்லை.
அத்துடனே ஓர் உயிரின் அடிப்படை மூலக்கூறே தண்ணீர் தான் என்று அல்லாஹ் கூறுகின்றான் என்றால் அதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
நாம் எல்லாப் பொருளையும் தண்ணீர் மூலமே உயிருள்ளவையாக ஆக்கினோம். ஆகவே எல்லாப் பொருள்களுக்கும் அடிப்படை மூலக்கூறாகத் தண்ணீர் இருக்கும் போது, அது அவற்றிற்கு உணவாக ஆவதை நாம் எப்படி மறுக்க முடியும்?

தாகம் கொண்ட ஒருவன் குளிர்ந்த நீரைப் பருகிய பின் அவனுக்கு அவனது ஆற்றலும், உற்சாகமும், இயக்கமும் திரும்ப கிடைக்கப்பெற்றதை அவன் உணர்கிறான்.
அதன்பின் உணவு தேவையில்லை எனும் அளவிற்கு உற்சாகமடைந்து விடுகின்றான். எனவே மிகக்குறைந்த அளவே உணவிலிருந்து பயன்பெறுகிறான்.
தாகமுடையவன் பெருமளவு உணவின்மூலம் பயன்பெறவோ ஆற்றலையும் சக்தியையும் அதன்மூலம் பெறவோ மாட்டான்.
தேன், எண்ணெய், பேரீச்சம்பழம், சர்க்கரை போன்று உடலுக்குள் செல்கின்ற நீர் குளிர்ச்சியாக இருந்தால் அது உடலுக்கு மிகுந்த பயனளிக்கும்.
அத்தோடு உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். இதனால்தான் குளிர்ந்த இனிப்பான நீரும் சேமித்து வைத்த நீரும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கு மிகவும் பிடித்தவையாக இருந்தன.
ஒரு கையால் தண்ணீர் அருந்தாதே!
ஆஸிம் பின் முஹம்மத் பின் ஸைத் பின் அப்தில்லாஹ்(ரளி) அவர்கள் தம் தந்தையிடமிருந்து, தம் பாட்டனார் கூறியதாக அறிவித்துள்ளதாவது: நாங்கள் எங்கள் வயிறுகளில்(நேரடியாக வாய் வைத்தவாறு) குடிப்பதை நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
ஒரு கையில்( உள்ளங்கையில்) குடிப்பதையும் தடுத்தார்கள். உங்களுள் ஒருவர் நாய் குடிப்பதை போன்று குடிக்க வேண்டாம்.

யார் மீது அல்லாஹ் கோபமடைந்தானோ அத்தகையக மக்கள் குடிப்பதை போன்று ஒரு கையால் குடிக்க வேண்டாம்.
மூடப்பட்ட பாத்திரமாக இருந்தாலே தவிர(மற்ற பாத்திரங்களை) சோதிக்காமல் எப்பாத்திரத்திலிருந்தும் இரவில் குடிக்க வேண்டாம்.
நின்றவாறு பருகாதே!
அமர்ந்தவாறு பருகுவது நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த வழிகாட்டுதல்களுள் ஒன்றாகும். இது அவர்களின் பழக்கமான வழிகாட்டுதல் ஆகும்.
நின்றவாறு பருகுவதை நபியவர்கள் தடுத்துள்ளார்கள் என்பது ஆதாரப்பூர்வமான நபிமொழியாகும்.
நின்றவாறு பருகியவர் தாம் குடித்ததை வாந்தி எடுக்க வேண்டும் என்ற கட்டளையும் அவர்களிடமிருந்து வந்துள்ள ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.
இப்னு அப்பாஸ்(ரளி) அவர்கள் கூறியதாவது, நபி(ஸல்) அவர்கள் நின்றுகொண்டு ஸம்ஸம் கிணற்றிலிருந்து(நீர்) பருகினார்கள்.
நின்றவாறு பருகுவதால் பல்வேறு ஆபத்துக்கள் உள்ளன. தாகம் முழுமையாக அடங்காது, ஈரலானது உடலுறுப்புகளுக்கு அதனைப் பங்கிடும் வரை இரைப்பையில் தங்காது, இரைப்பைக்குள் மிகத் துரிதமாகவும் வேகமாகவும் இறங்குகிறது, அதனால் இரைப்பையின் வெப்பத்தை உடனடியாக குளிர்ச்சியடையச்செய்துவிடும் என்று அஞ்சப்படுகிறது.
கொஞ்சம் கொஞ்சமாக அல்லாமல் உடலின் அடிப்பகுதிக்கு மிக விரைவாக சென்றடைந்துவிடுகிறது, இவை அனைத்தும் தண்ணீர் குடிப்பவருக்கு இடையூறளிக்கும், அதேநேரத்தில் எப்போதாவது ஒரு தடவை இவ்வாறு குடிப்பதாலோ அவசரத் தேவையை கருதி இவ்வாறு குடிப்பதாலோ எந்த இடையூறும் ஏற்படாது.