வாகன இறக்குமதி குறித்து அரசாங்கத்தின் விசேட செய்தி
2025ஆம் ஆண்டு முதல் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி எதிர்பார்ப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (25) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மிக நுணுக்கமான ஆய்வுகளின் பின்னரே, வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். சர்வதேச நாணய நிதியத்துடனான நீட்டிக்கப்பட்ட கடன் ஒப்பந்தத்தின் கீழ் நாடு பயணித்து வருகிறது.
வாகன இறக்குமதி தளர்வு
அந்த ஒப்பந்தத்தின் படி, பூர்த்தி செய்யப்பட வேண்டிய நிபந்தனைகள் மற்றும் முன்நிபந்தனைகள் உள்ளன. மொத்த அந்நிய செலாவணி கையிருப்பை 2025இல் 8 பில்லியன் ரூபாவாகவும், 2026இல் 10 பில்லியனாகவும், 2027இல் 14 பில்லியனாகவும் அதிகரிக்க வேண்டியது அவசியம்.
எனவே அந்த வெளிநாட்டு கையிருப்பு பறிபோகும் வகையில் வாகன இறக்குமதியில் தளர்வு செய்ய முடியாது. எனவே சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கேட்டு முறையீடு செய்வதற்கு நிதியமைச்சின் கீழ் ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |