அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சிறப்பு தூதர் இலங்கைக்கு விஜயம்
அமெரிக்க (America) இராஜாங்க திணைக்களத்தின் உலக இளையோர் பிரச்சினைகளுக்கான சிறப்பு தூதரான அபி பின்கெனவர் (Abby Finkenauer) இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறப்பு தூதுவரான அபி பின்கெனவர் இன்று (12) தனது பயணத்தை ஆரம்பித்து எதிர்வரும் 15ஆம் திகதி வரையிலும் இலங்கை மற்றும் நேபாளத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த விஜயமானது, தெற்காசிய இளையோர் தலைவர்களை ஊக்குவிப்பதில் அமெரிக்காவின் அர்ப்பணிப்பை உணர்த்துவதோடு குடியுரிமை பங்கேற்பு மற்றும் இளையோரின் தலைமைத்துவம், கலாச்சாரப் பாதுகாப்பு மற்றும் சமூக நெகிழ்வுத்தன்மை போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்த ஒத்துழைப்பை வளர்ப்பதன் முக்கியத்துவம் என்பவற்றை வெளிப்படுத்தும் நோக்கில் இடம்பெறவுள்ளது.
திட்டமிடலில் இலங்கைக்கான முன்னேற்றம்
விசேட தூதர் பின்கெனவர் மற்றும் அமெரிக்க தூதர் ஜூலி சங் ஆகியோர் இணைந்து அமெரிக்க தூதரகத்தின் இளையோர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி அமைப்பின் (யுஎஸ்எய்ட் ) ஒத்துழைப்பில் எமெர்ஜிங் லீடர்ஸ் அகடமியின் (Emerging Leaders Academy) முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளனர்.
தொடர்ந்தும் இலங்கையில், அமெரிக்க தூதரகம் மற்றும் இலங்கையின் கூட்டுறவின் மூலம் கல்வி, தலைமைத்துவம் மற்றும் குடியுரிமை பங்கேற்பு போன்ற துறைகளில் இளம் தலைவர்களை ஊக்குவிக்கும் திட்டங்களின் தாக்கம் என அனைத்தினையும் சிறப்பு தூதரான அபி பின்கெனவர் அவதானிப்பார் என கூறப்பட்டுள்ளது.
மேலும், படைப்புத்துறைகளில் இளம் பெண்களை ஊக்குவிக்கும் 'விமென் இன் மோஷன்' (Women in Motion program) திட்டத்தின் மூலம் உருவான இளம் பெண்களுடனும் கலந்துரையாடவுள்ளனதுடன் இத்திட்டத்தின் மூலம் வெற்றிகரமாக செயல்படும் இளம் தொழில் முனைவோரை உருவாக்கும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நேபாளத்திற்கான விஜயம்
நேபாளத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் சிறப்பு தூதர் அபி பின்கெனவர், சமூக ஊடகங்களில் செல்வாக்குச் செலுத்துபவர்களுடன் இணைய அச்சுறுத்துல் மற்றும் தவறான தகவல்கள் போன்ற முக்கிய பிரச்சினைகளைப் பற்றிய வட்டமேசை மாநாடொன்றிலும் கலந்துகொள்ளவுள்ளனர்.
மேலும் நேபாளத்தில் இளம் அரசியல் தலைவர்களையும், அமெரிக்க உதவியுடன் நடைபெற்ற பரிமாற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முன்னாள் மாணவர்களையும் சந்தித்து இளையோர் தலைமைத்துவத்தில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளனர்.
இதனை தொடர்ந்து, அமெரிக்க இளையோர் மன்ற உறுப்பினர்களுடன் வெளிநாட்டு கொள்கை முன்னுரிமைகள் குறித்தும் அவர்களது புது தேர்தல் திட்டத்தையும் பார்வையிடவுள்ளனர்.
இதன் மூலம் தெற்காசிய இளையோர் தலைவர்களுடன் கூட்டுறவை அதிகரித்து, உலகளாவிய இளையோர் பிரச்சினைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலக இளையோர் பிரச்சினைகளுக்கான சிறப்பு தூதர் அபி பின்கெனவரின் விஜயத்தின் நோக்கமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |