வெனிசுவேலாவின் 5 ஆவது எண்ணெய் கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா
வெனிசுவேலாவின் இடைக்கால அரசாங்கத்தை முடக்கும் முயற்சியாக, அந்நாட்டின் எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கையில் 5ஆவது எண்ணெய் கப்பல் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கை கரீபியன் கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
போலி கொடியைப் பயன்படுத்தி
வெனிசுவேலா கடற்பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வெளியேறிய 'ஒலினா' (Olina) என்ற எண்ணெய் கப்பலை, அமெரிக்க கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் வெள்ளிக்கிழமை அதிகாலையில் சிறைபிடித்தனர்.

ஹெலிகொப்டரில் இருந்து கயிறு மூலம் கப்பலுக்குள் குதித்த அமெரிக்க கடற்படை வீரர்கள், மின்னல் வேகத்தில் கப்பலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இது தொடர்பான வீடியோவை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலாளர் கிறிஸ்டி நோம் பகிர்ந்துள்ளார்.
வெனிசுவேலா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு, தடை செய்யப்பட்ட எண்ணெயை ஏற்றிச் செல்லும் 1,000க்கும் மேற்பட்ட "நிழல் கப்பல் படைகளை" (Dark Fleet) அழிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
'ஒலினா' கப்பல் திமோர்-லெஸ்டே நாட்டின் போலி கொடியைப் பயன்படுத்தி தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
அடுத்தடுத்து 5 கப்பல்களை
இது குறித்துப் பேசிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், "வெனிசுவேலாவிடம் இருந்து சுமார் 2.8 பில்லியன் டொலர் மதிப்புள்ள 5 கோடி பீப்பாய் மசகு எண்ணெய் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் வெனிசுவேலா மக்களின் நலனுக்காகச் செலவிடப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்க்கோ ரூபியோ விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை எந்த நாட்டின் கொடியையும் பயன்படுத்தாத அல்லது போலி கொடியுடன் செல்லும் கப்பல்களைச் சோதனையிடவும், சிறைபிடிக்கவும் சர்வதேச கடல்சார் சட்டத்தின்படி அதிகாரம் உள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பின்னணியிலேயே அமெரிக்கா அடுத்தடுத்து 5 கப்பல்களைச் சிறைபிடித்துள்ளது.