இஸ்ரேலின் கடைசி பணயக் கைதி உடல்! மகிழ்ச்சியை வெளியிட்ட பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேலின் கடைசி பணயக்கைதி உடலும் மீட்கப்பட்டிருப்பது குறித்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மிகுந்த மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை தான் வாக்குறுதி அளித்தபடி அனைத்து பணயக்கைதிகளும் மீட்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர், 1,200-க்கு மேற்பட்டோரை கொன்று குவித்ததுடன், 251 பேரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே பலத்த போர் ஏற்பட்டது.
போர் நிறுத்தம்
2 ஆண்டுகளாக இந்த போர் நீடித்த நிலையில் தற்போது காசாவில் முதற்கட்ட போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ளது.

இதற்கிடையே பல கட்டங்களாக பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதில் பலர் உயிருடனும், சிலரின் உடல்களும் இஸ்ரேல் வசம் ஒப்படைக்கப்பட்டு வந்தன. எனினும் கடைசி பணயக்கைதியான ரான் ஜவிலி என்பரின் உடல் ஒப்படைக்கவில்லை.
எனவே அதை கண்டுபிடிப்பதற்காக இஸ்ரேல் ராணுவம் காசாவின் வட பகுதியில் உள்ள கல்லறை தோட்டம் ஒன்றில் தீவிரமாக தேடியது.
தற்போது அவருடைய உடல் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதன் பின்னரே நெதன்யாகு மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.
மேலும், கடைசி பணயக்கைதியின் உடலும் மீட்கப்பட்டதை தொடர்ந்து 2-வது கட்ட போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தைக்கு வழி ஏற்பட்டிருப்பதாக சர்வதேச நிபுணர்கள் கூறியுள்ளனர்.