புயல் வடுக்களைக் கடந்து புதுப்பொலிவு பெற்ற சுமையா மகளிர் அரபுக் கல்லூரி: புதிய மாணவிகள் வரவேற்பு!
டிட்வா புயலின் கோரத்தாண்டவத்தால் நிலைகுலைந்து போயிருந்த கிண்ணியா சுமையா மகளிர் அரபுக் கல்லூரி இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
சுமார் 48 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட கிண்ணியா சுமையா மகளிர் அரபுக் கல்லூரி, புயல் ஏற்படுத்திய பாதிப்புகளைக் கடந்து, 2026 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவிகளின் வருகையோடு இன்று புத்துயிர் பெற்றுள்ளது.
கல்லூரியின் உபதலைவர் எஸ்.எம். ஹசன் தலைமையில் நடைபெற்ற இந்த அனுமதி நிகழ்வில், கல்லூரியின் வரலாற்றுச் சாதனைகள் நினைவுகூரப்பட்டன.
ஒரு மைல்கல்
1978 ஆம் ஆண்டு முதல் நூற்றுக்கணக்கான மௌலவியாக்களையும் பட்டதாரிகளையும் உருவாக்கிச் சாதனை படைத்த இக்கல்லூரி, ஒரு பாரிய இயற்கை அனர்த்தத்திற்குப் பிறகு மீண்டும் கல்விப் பணிகளை ஆரம்பிப்பது ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

கல்லூரி அதிபர் அஷ்-ஷைக் அப்துல்லாஹ் ரபீஸ் (மதனி) விசேட உரையாற்றினார். 350 மாணவிகளுடன் இயங்கும் இக்கல்லூரியில், இன்று 60 புதிய மாணவிகள் இணைந்துள்ளனர்.
புயல் பாதிப்புகளைச் சீரமைத்து, கல்லூரியை இயல்பு நிலைக்குக் கொண்டுவர நிர்வாகம் எடுத்த முயற்சியைப் பெற்றோர்கள் வெகுவாகப் பாராட்டினர். ஆசிரியர்கள், நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்நிகழ்வு, ஒரு கல்வி நிறுவனத்தின் மீள் எழுச்சியாக மட்டுமன்றி, சமூகத்தின் ஒற்றுமைக்குச் சான்றாகவும் அமைந்தது.
பெற்றோர்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே, இக்கல்லூரி இழந்த பொலிவை முழுமையாக மீட்க முடியும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.







