அடுத்த ஆண்டு முதல் புலமைப்பரிசில் பரீட்சையில் பாரிய மாற்றம்: கல்வி அமைச்சரின் அறிவிப்பு
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மொத்த மதிப்பெண்ணை இனிமேல் பரீட்சையின் வினாத்தாள்களில் பெற முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) அறிவித்துள்ளார்.
நாத்தாண்டிய தம்மிஸ்ஸர வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய மூன்று மாடி தொழிநுட்ப கட்டடத்தை கையளிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றிருந்தது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றங்கள்
மேலும் தெரிவிக்கையில், புதிய கல்விச் சீர்திருத்தங்கள் 2025ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும். 1-6-10 முன்னோடித் திட்டங்களின் கீழ் புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.
அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சையில் 30% புள்ளிகள் தரம் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையில் பெற்ற கல்வியின் மூலம் வழங்கப்படும்.
இதை முறையாக மதிப்பிடுவது ஆசிரியரின் பொறுப்பு. பாடசாலை நிர்வாகத்தினர் ஆசிரியர்களை கண்காணிக்க வேண்டும். புதிய உலகின் கல்விப் போக்குகளை மனதில் கொண்டு இந்த கல்வி முறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு 2500 அதிநவீன ‘ஸ்மார்ட் போர்டுகள்’ வழங்கப்படும். மூன்று ஆண்டுகளுக்குள் அனைத்துப் பாடசாலைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, நட்பு ரீதியான கல்வி வாய்ப்புகளை வழங்கும் வகையில் ஒரே வலையமைப்பில் இணைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.