வறட்சி நீங்கி மழை வேண்டி கிண்ணியாவில் சிறப்புத் தொழுகை மற்றும் துஆ
கிழக்கு மாகாணத்தில் உள்ள கிண்ணியா பிரதேசம் கடும் வறட்சியால் வாடும் நிலையில், வறட்சி நீங்கி, மனமிரங்கி மழை பொழிய வேண்டி இன்று விசேட தொழுகையும் துஆ பிரார்த்தனையும் நடுஊற்று அல் ஹஸனாத் பொது மைதானத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
கிண்ணியா விவசாயிகள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
விவசாயிகள் மன்றாடி பிரார்த்தனை நீரின்றிப் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், தங்கள் கைகளை உயர்த்தி, கண்ணீருடன் இறைவனிடம் மன்றாடிப் பிரார்த்தித்தனர்.
தங்கள் அறியாத பாவங்களை மன்னித்து, வான் மழையை ஒரு கருணையாகத் தர வேண்டும் என்று அவர்கள் உருக்கத்துடன் துஆ செய்தனர். இந்த விசேட தொழுகையையும் துஆ பிரார்த்தனையையும் மௌலவி T.M. மஹ்மூது அவர்கள் நடத்தினார். நிகழ்வில் கலந்துகொண்ட விவசாயிகள், தற்போதைய வறட்சி நிலை குறித்துப் பத்திரிகையாளர்களிடம் வேதனையுடன் கருத்துத் தெரிவித்தனர்.
"நாங்கள் நெல் செய்கை பண்ணி கிட்டத்தட்ட 50 நாட்களைத் தாண்டிவிட்டோம். ஆனால், இன்னும் வறட்சியே நிலவுகிறது. முளைத்த பயிர்கள் நீரின்றிக் கருகி, அழிந்து வருகின்றன.
இது எங்களின் வாழ்வாதாரத்தை மிகப் பெரிய அளவில் பாதித்துள்ளது. கஷ்டப்பட்டு விதைத்த பயிர்கள் காய்ந்து போவதைப் பார்ப்பது மிகவும் மனவேதனையாக உள்ளது.
" கிண்ணியாப் பிரதேச விவசாயிகள் இந்த சிறப்புத் தொழுகை மற்றும் துஆ மூலம், அல்லாஹுவின் அருளால் வறட்சி நீங்கி, விவசாயிகளின் வாழ்வு செழிக்கத் தேவையான மழை விரைவில் பொழியும் என அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் ஆழமாக நம்புகின்றனர்.

