தெற்காசிய தடகளத்தில் இரண்டாம் இடம் பெற்ற இலங்கை அணிக்கு உற்சாக வரவேற்பு
இந்தியாவில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டிற்கான தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கங்களை குவித்து, இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கை அணி இன்று(28.10.2025) நாடு திரும்பியது.
அவர்கள் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இந்தியாவின் ரான்சி நகரில் இடம்பெற்ற தெற்காசிய மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டியில் இலங்கை 16 தங்கப்பதக்கங்களுடன் 20 தங்கப்பதக்கங்களை வென்ற இந்தியாவுக்கு அடுத்து, இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
பீ.டீ. உஷாவின் போட்டிச் சாதனையை சபியா முறையடித்தார்
அத்துடன், மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியின் கடைசி நாளான நேற்று முன்தினம்(26.10.2025) மாத்திரம் இலங்கையால் மொத்தம் எட்டு தங்கப்பதக்கங்களை வெல்ல முடிந்தது.

இதில் இலங்கை குறுந்தூர ஓட்ட வீராங்கனை பாத்திமா சபியா யாமிக் பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றதன் மூலம் தெற்காசிய மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டியில் அவர் மொத்தமாக மூன்று தங்கங்களை கைப்பற்றினார்.
இத்துடன், நேற்று முன்தினம் நடந்த பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் அவர் இரு இந்திய வீராங்கனைகளை பின்தள்ளி 23.58 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்து முதல் இடத்தைப் பிடித்தார்.
இதன்போது அவர் 1997 இல் 23.58 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்து சாதனை படைத்திருந்து இந்தியாவின் பீ.டீ. உஷாவின் போட்டிச் சாதனையையும் முறியடித்தார்.
உற்சாக வரவேற்பு
சபியா ஏற்கனவே பெண்களுக்கான 100 மீற்றர் மற்றும் 100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாடு திரும்பிய வீரர்களை வரவேற்க இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றுள்ளனர்.
இந்த வெற்றியை அடைவதற்கு அவர்கள் வழங்கிய அர்ப்பணிப்பு, உற்சாகம் மற்றும் போட்டிக்கு அமைச்சகம் நன்றியையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.
You May Like This Video...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |