காசா மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பை வன்மையாக கண்டிக்கும் சவூதி அரேபியா..!
காசா பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை சவூதி அரேபியா மிக வன்மையாக கண்டித்துள்ளது.
ஆகஸ்ட் 8, 2025 அன்று வெளியிட்ட விசேட அறிக்கையில், “இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரிகள் காசா பகுதியை ஆக்கிரமிக்க எடுத்த முடிவை சவூதி அரேபியா வன்மையாக கண்டிக்கிறோம்” என்று சவூதி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அறிக்கை மேலும், “பட்டிணி, கொடூரமான செயற்பாடுகள், மற்றும் இன அழிப்பு போன்ற குற்றங்களை பாலஸ்தீன மக்கள் மீது தொடர்ச்சியாக செய்வதை இராச்சியம் தெளிவாகவும் உறுதியான முறையிலும் கண்டிக்கிறது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கை
இஸ்ரேல் எடுத்த முடிவுகள், பாலஸ்தீன மக்களின் உணர்ச்சி, வரலாறு மற்றும் சட்ட ரீதியான உரிமைகளைப் புரிந்துகொள்ள தவறிவிட்டதாகவும், சர்வதேச சட்டங்களும் மனிதாபிமானக் கொள்கைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை வலியுறுத்துகிறது.
சர்வதேச சமூகம் மற்றும் ஐ.நா.பாதுகாப்பு சபை உடனடியாக இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்தாதது, “சர்வதேச ஒழுங்கையும் சட்டபூர்வ தன்மையையும் பாதிப்பதுடன், பிராந்திய மற்றும் உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகும்.
இன அழிப்பு மற்றும் கட்டாய இடம்பெயர்வு போன்ற விளைவுகளை உருவாக்கும்” என்று சவூதி அரேபியா எச்சரித்துள்ளது. மேலும், “இஸ்ரேலின் தொடர்ச்சியான குற்றங்களை நிறுத்த, சர்வதேச சமூகம் வலுவான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இதன் மூலம் பாலஸ்தீன மக்களைச் சூழ்ந்துள்ள மனிதாபிமான பேரழிவை முடிவுக்கு கொண்டு வரலாம்” என்றும், “1967 எல்லைகளுக்குள் கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்டு சுயாட்சி பாலஸ்தீன அரசை உருவாக்கும் இரு நாடு தீர்வே நீடித்த அமைதிக்கான ஒரே வழி” என்றும் அவ் அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

