கிழக்கு முஸ்லிம் அரசியலில் ‘மறைமுக அடிமைத்தனம்’ – மிப்லால் கண்டனம்
கிழக்கு முஸ்லீம்கள் அரசியலில் மறைமுகமான அடிமைத்தனத்தின் கீழ் இருப்பது கவலையளிப்பதாகவும், பொத்துவில்–அறுகம்பை பிரச்சினை அரசியலாக்கப்படுவது வருத்தமளிப்பதாகவும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால் தெரிவித்தார்.
நேற்று (09) மாலை கல்முனையில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர், “இஸ்ரேலுக்கு எதிரான ஸ்டிக்கர் ஒட்டும் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. எங்கள் கொழும்பு அலுவலக குப்பைத்தொட்டியிலும் கூட அந்த ஸ்டிக்கர் உள்ளது,” என்று வலியுறுத்தினார்.
சட்டவிரோத சபாத் இல்லங்கள் குறித்து எச்சரிக்கை
மிப்லால், கடந்த காலங்களில் இன்றைய பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய அமைச்சுகளில் இருந்தும் நடவடிக்கை எடுக்காத முஸ்லிம் அரசியல்வாதிகள், இப்போது இஸ்ரேல் தொடர்பில் அரசியல் லாபம் தேடுவதாக குற்றம் சாட்டினார்.
பொத்துவில்–அறுகம்பே பகுதியில் அரச அனுமதி இன்றி இயங்கும் இஸ்ரேலிய வழிபாட்டு தளங்கள் (சபாத் இல்லங்கள்) நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
அருகில் உள்ள பள்ளிவாசல், அந்த சபாத் இல்லத்தின் வாகன தரிப்பிடமாக மாறியிருப்பதாகவும், அதைத் தடுக்கும் நடவடிக்கை அவசியமெனவும் அவர் வலியுறுத்தினார்.
“கிழக்கு மாகாணம் முஸ்லிம் முதலமைச்சரால் ஆளப்பட வேண்டும்” வடக்கு தமிழ்மக்கள் முதலமைச்சரால் ஆளப்பட வேண்டும் என்ற கொள்கையைப் போலவே, கிழக்கு மாகாணம் முஸ்லிம் முதலமைச்சரால் நிர்வகிக்கப்பட வேண்டும் என தனது நிலைப்பாட்டை அவர் உறுதிப்படுத்தினார்.
அதற்காக, எதிர்வரும் காலங்களில் காங்கிரஸ் தலைவர்களையும் பெருந்தேசியக் கட்சியில் உள்ள முஸ்லிம் பிரதிநிதிகளையும் ஒன்றிணைத்து ஒரு கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இருப்பதாகக் கூறினார்.
இந்த ஊடக சந்திப்பில், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான ஐ.ஏ.கலீலுர் ரஹ்மான், பிரதி தலைவர் கலாநிதி ஹக்கீம் ஷெரீப், இணைப்பாளர் ஏ.எம்.அஹூவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |