பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
நாடளாவிய ரீதியில் உள்ள பல்பொருள் அங்காடிகள் மற்றும் கிளைகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது பொலித்தீன் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு 500 ரூபாவுக்கு 5 ரூபாவை குறைக்க பல்பொருள் அங்காடி உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் மற்றும் பல்பொருள் அங்காடித் தலைவர் ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலித்தீன் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு விசேட தள்ளுபடியை வழங்குமாறு சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான துறைசார் கண்காணிப்புக்குழு விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில் இவ்வாறு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையினால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை இல்லாதொழிக்க முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.