பாடசாலை ஆசிரியர்களின் வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்ப கோரிக்கை
தேசியப் பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்றத் திட்டத்திற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, விண்ணப்பங்கள் 2026 ஜூலை 16 முதல் ஜூலை 30 வரை தேசியப் பாடசாலை ஆசிரியர் இடமாற்ற (NSTT) இணையத் தளத்தின் மூலம் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ஆசிரியர்கள் தங்களது விண்ணப்பங்களை http://nstt.moe.gov.lk என்ற இணையத்தளத்தில் மூலம் பூர்த்தி செய்து, அதன் அச்சுப் பிரதியைப் பெற்று, சம்பளம் பெறும் பாடசாலையின் அதிபரிடம் 2026 ஜூலை 31 ஆம் திகதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
ஊடாக இடமாற்ற நடவடிக்கை
அந்த அச்சுப் பிரதியை சம்பந்தப்பட்ட பாடசாலை நிர்வாகத்தின் ஊடாக இடமாற்ற நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆசிரியர்கள் நேரடியாக கையளிக்கும் விண்ணப்பங்களோ அல்லது அஞ்சல் மூலமாக அனுப்பப்படும் விண்ணப்பங்களோ எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
எனவே, தகுதியுடைய அனைத்து ஆசிரியர்களும் ஆன்லைன் முறையை மட்டுமே பயன்படுத்தி, அறிவிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
தேசியப் பாடசாலைகளுக்கிடையிலான ஆசிரியர் இடமாற்றங்களை அமைச்சின் இடமாற்றக் கொள்கைக்கு அமைவாக நடைமுறைப்படுத்தும் நோக்கில் இந்த வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றத் திட்டம் ஆண்டுதோறும் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.