சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் விடுத்துள்ள கோரிக்கை
காலாவதியான உணவு குறித்து விழிப்புடன் இருக்குமாறு சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தரமான சுகாதாரப் பராமரிப்பை உறுதி செய்வதற்கான திட்டமிடல் மற்றும் கடந்த வாரப் பணிகளின் விரிவான மீளாய்வுக் கலந்துரையாடல் சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் நௌசாட் முஸ்தபா தலைமையில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
சுகாதார மேன்மை தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகள் இக்கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
காலாவதியான உணவுப் பொருட்கள்
இந்தநிலையில், கடந்த மூன்று தினங்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அதிகளவான ஐஸ் கிறீம் உற்பத்திப் பொருட்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பொதுமக்களின் ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும் விதத்தில் செயல்பட்ட நிறுவனங்கள் மீது வழக்குத் தாக்கல்கள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே காலாவதியான உணவு குறித்து விழிப்புடன் இருக்குமாறு சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனவே பொதுமக்கள் ஒவ்வொருவரும் விழிப்படைவதுடன் உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்த பாதுகாப்பினை வழங்க உணவுப் பொருட்களின் தரம் மற்றும் காலாவதி திகதியைச் சரிபார்க்க தவற வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

