அனைத்து அமல்களையும் விடச் சிறந்தது
அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், தொழுகையில் குர்ஆன் ஓதுவது தொழாத நேரத்தில் குர்ஆன் ஓதுவதைவிடச் சிறந்ததாகும்.
தொழாத நேரத்தில் குர்ஆன் ஓதுவது, தஸ்பீஹ் தக்பீர் ஆகியவற்றை ஓதுவதைவிட சிறந்ததாகும். தஸ்பீஹ் ஓதுவதாகிறது, சதக்காத செய்வதை விட சிறந்ததாகும்.
சதக்கா செய்வது, நோன்பு வைப்பதைவிட சிறந்ததாகும், நோன்பாகிறது நரக நெருப்பை விட்டும் பாதுகாக்கும் கேடயமாகும்” என நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்.

விளக்கம்
குர்ஆன் ஓதுவது திக்ரு செய்வதை விட சிறந்தது என்பது தெளிவான விஷயமாகும். ஏனெனில் அல்லாஹ் அவன் படைப்பினங்களை விட சிறப்புற்றவனாக இருப்பது போல், அவனுடைய திருவசனமும் மற்றெல்லாவற்றையும் விட உயர்ந்ததாகும் என்ற கருத்து முன்னால் கூறப்பட்டுள்ளது.
அல்லாஹ்வை திக்ரு செய்தல் சதக்கா செய்வதை விட சிறந்ததென்பது பல ஹதீஸ்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து, சிலருடைய விஷயத்தில் நோன்பு சிறந்ததாகவும், வேறு சிலருடைய விஷயத்தில் சதக்கா சிறந்ததாகவும் அமைந்துவிடும்.
ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் கூறியுள்ளதாக இமாம் கஜ்ஜாலி(ரஹ்) அவர்கள் இஹ்யாவில் எழுதுவதாவது, தொழுகையில் நின்ற வண்ணம் குர்ஆன் ஓதுபவருக்கு ஓர் எழுத்தில் நூறு நன்மைகள் வீதமும்,
தொழுகையில் உட்கார்ந்து கொண்டு குர்ஆன் ஓதுபவருக்கு ஓர் எழுத்திற்கு ஐம்பது நன்மைகள் வீதமும்,
தொழுகைக்கு வெளியே உளுவுடன் இருந்து குர்ஆனை ஓதுபவருக்கு ஓர் எழுத்திற்கு இருபத்து ஐந்து நன்மைகள் வீதமும்,
வெளியே உளு இல்லாமல் ஓதுபவர்களுக்கு ஓர் எழுத்திற்கு பத்து நன்மைகள் வீதமும்,
குர்ஆனை ஓதாமல் ஓதுபவருடைய ஓதுதலைக் காது தாழ்த்தி கேட்பவருக்கு ஓர் எழுத்திற்கு ஒரு நன்மை வீதமும் வழங்கப்படும்.
