பெற்றோருக்கு கிடைக்கும் பரிசு
ஹஜ்ரத் முஆத்(ரலி) அவர்கள் அறிவிப்பதாவது, ”எவரொருவர் குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்கிறாரோ அவருடைய பெற்றோருக்கு கியாமத் நாளில் ஒரு கிரீடம் அணிவிக்கப்படும்.
அதன் ஒளி உலகில் சூரியன் உங்களுடைய வீடுகளில் இருந்தால் எவ்வளவு பிரகாசமாக இருக்குமோ அதைவிட அதிகமாக இருக்கும்.
எனவே அதன்படி அமல் செய்தவரைபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்.
குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்வதின் பரக்கத்து எவ்வளவு உயர்வானதென்றால், அவருடைய பெற்றோருக்கும் சூரியனை விட பிரகாசமான கிரீடம் அணிவிக்கப்படுகிறது.

குர்ஆனை ஓதி அமல் செய்தவரின் பெற்றோருக்கே இவ்வளவு சிறப்புகள் வழங்கப்படுகின்றனவென்றால் அவருக்கு எந்த அளவு நன்மைகள் கிடைக்கும் என்பதையும் நாம் ஊகித்துக்கொள்ளலாம்.
இவர் உலகில் உருவாவதற்கும், இவர் குர்ஆனை கற்று செயல்படுவதற்கும் பெற்றோர் காரணமாக இருப்பதால் அவர்களுக்கு இவ்வளவு சிறப்புகள் வழங்கப்படுகின்றன. ”எவரொருவர் குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்கிறாரோ அவருக்கு(கியாமத்து நாளில்) ஒளியினாலான ஒரு கிரீடம் அணிவிக்கப்படும்.
அவருடைய பெற்றோருக்கு இரண்டு ஆடைகள் அணிவிக்கப்படும். இவ்வுலகம் முழுதும் அந்த ஆடைகளுக்கு நிகராக முடியாது.(அவ்வளவு உயர்வான ஆடைகள் அவை)
அப்பொழுது அப்பெற்றோர், யா அல்லாஹ்! இந்த ஆடைகள் எதற்கு வெகுமதியாக அளிக்கப்பட்டிருக்கின்றன? என்று கேட்பார்கள்.
உங்களுடைய குழந்தை, குர்ஆனை படித்து அமல் செய்ததில் பிரதிபலனாக வழங்கப்பட்டிருக்கினறன என்று பதில் கூறப்படும் என நபி(ஸல்) அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் புரைதா(ரலி) அறிவித்துள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் அனஸ்(ரலி) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸில், ”ஒருவர் தம்முடைய குழந்தைக்கு குர்ஆனை பார்த்து ஓதக்கற்றுத் தந்தால் அவருடைய முன்,பின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிடும்.
இன்னும் ஒருவர் தம் குழந்தைக்கு குர்ஆனை மனனம் செய்ய வைத்தால் அவர் கியாமத்து நாளில் பௌர்ணமி நிலவு போன்று எழுப்பப்படுவார்.
அப்பொழுது அவருடைய குழந்தையிடம், நீ ஓதத் தொடங்கு என்று சொல்லப்படும். அவர் ஓர் ஆயத்தை ஓதியவுடன் அவருடைய தந்தைக்கு ஒரு பதவி உயர்வு வழங்கப்படும்.
இவ்வாறு குர்ஆன் ஷரீபை முழுமையாக அவர் ஓதி முடிக்கும் வரை தந்தையின் பதவி உயர்த்தப்பட்டுக்கொண்டே இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
