தனியார் பேருந்தின் சாரதி சேவையிலிருந்து இடைநிறுத்தம்

Mannar Northern Province of Sri Lanka Srilanka Bus
By Ashik Jan 29, 2026 06:17 AM GMT
Ashik

Ashik

பயணிகள் போக்குவரத்து சேவை விதிமுறைகளை மீறி, கைப்பேசியைப் பயன்படுத்தியவாறு பேருந்தை செலுத்திய தனியார் பேருந்து சாரதி ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் சென்ற மற்றொரு பேருந்து சாரதி மற்றும் நடத்துனருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முறைப்பாடுகளை முன்வைக்கும் பட்சத்தில்

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 25.01.2026 அன்று காலை 9.45 மணி அளவில் மன்னாரில் இருந்து புறப்பட்ட தனியார் பேருந்தின் சாரதி, தனங்கிளப்பு வரையிலான பயணத்தின் போது, வீதிப் பாதுகாப்பு மற்றும் சேவை விதிமுறைகளை மீறி, கைப்பேசியில் உரையாடியவாறு பேருந்தை செலுத்தியமை தொடர்பில் காணொளி ஆதாரங்களுடன் முறைப்பாடு கிடைக்க பெற்றிருந்தது.

தனியார் பேருந்தின் சாரதி சேவையிலிருந்து இடைநிறுத்தம் | Private Bus Driver Suspended From Service

இம் முறைப்பாடு தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில், குறித்த பேருந்து சாரதி மறு அறிவித்தல் வரும் வரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோன்று, கடந்த 23.01.2026 அன்று மதியம் 1.40 மணி அளவில், மாங்குளம் மகா வித்தியாலய மாணவர்களை ஏற்றாமல் சென்ற தனியார் பேருந்து தொடர்பாக, பாடசாலை நிர்வாகத்தால் அதிகார சபைக்கு எழுத்து மூலம் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதற்கமைவாக, தொடர்புடைய பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அவர்களுக்கு உத்தியோகபூர்வமான கடும் எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்துச் சேவைகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், இவ்வாறான விதி மீறல்கள் தொடர்பில் பொதுமக்கள் ஆதாரங்களுடன் முறைப்பாடுகளை முன்வைக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக தயங்காமல் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.