பண்டிகைக் கால முற்பணத் தொகை! அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
அரச ஊழியர்களுக்கான வழங்கப்படும் பண்டிகைக் கால முற்பணத் தொகையை அதிகரிப்பது தொடர்பான சுற்றறிக்கையை அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.
நேற்று (13) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்த முற்பணத் தொகையை 15,000/- ரூபாய் வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
முற்பணத் தொகை
அரச அதிகாரிகளுக்கு பண்டிகைக் கால முற்பணம் வழங்குவது தொடர்பான தாபனக் கோவையின் விதிகளுக்கமைய, தைப்பொங்கல், ரமழான், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு, வெசாக், தீபாவளி மற்றும் நத்தார் போன்ற பண்டிகைகளுக்காகவும், புனித யாத்திரைகளுக்காகவும் (ஸ்ரீ பாத யாத்திரை மற்றும் ஹஜ் யாத்திரை போன்றவை) தற்போது 10,000/- ரூபாய் முற்பணமாகப் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது.

இந்த முற்பணத் தொகையை வட்டியின்றி 8 மாதத் தவணைகளில் அல்லது தேவைப்படின் அதற்கு முன்னதாகவோ மீளச் செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறித்த பண்டிகைக் கால முற்பணத் தொகையை 15,000/- ரூபாய் வரை அதிகரிப்பதற்கு 2026 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டிருந்ததுடன், அதற்கான சுற்றறிக்கையே தற்போது அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.