குழந்தைகளுக்கு தொழுகையும் நோன்பும்
ஹஜ்ரத் ஷீப்ரத் இப்னு மஃபத் அவர்கள் அறிவிப்பதாவது, ”சிறுவர்களை தொழுமாறு கட்டளையிடுங்கள் அவர்கள் ஏழுவயதை அடைந்துவிடின் ஆனால் அவர்கள் பத்து வயதாகியும் தொழ வராவிடின் அவர்களை அடித்து தொழ செய்யுங்கள்” என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எனவே நம் சிறு பிள்ளைகளை தொழும்படி ஏவுவதும், ஊக்குவிப்பதும் பெற்றோராகிய நம் மீது கடமையாகும்.

ஆண் பிள்ளைகளாயிருப்பின், அவர்களுக்கு ஒளுச் செய்யும் முறைகளை கற்றுத்தந்து, நாம் பள்ளிவாயிலுக்கு செல்லும் பொழுது அவர்களையும் அழைத்து செல்வது நல்லது.
ஜும்ஆ தொழுகைக்கு தவறாமல் அழைத்து செல்லும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். ஆண் பிள்ளைகளுக்கு முறையான ஆடை அணிவித்து அழைத்து செல்ல வேண்டும், பிள்ளைகள் தொழுவோரின் குறுக்கும் நெடுக்கும் செல்லாமற் பார்த்துக் கொள்ள வேண்டும், முன்கூட்டியே அவர்களுக்கு எடுத்துக்கூறி அழைத்து செல்வது அவசியம்.
உமைய்யாக் கலீஃபாக்களில் ஒருவரும், நேர்வழி நடந்த கலீஃபாக்களில் ஐந்தாமவரும் ஆகிய ஹஜ்ரத் உமர் இப்னு அப்துல் அஜீஸ்(ரஹ்) அவர்கள், தங்கள் பிள்ளைகளை நன்முறையில் வளர்ப்பதில் கண்ணுங்கருத்துமாய் இருந்தார்கள்.
தம் பிள்ளைகளை ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுமாறு அவர்கள் ஆணையிட்டார்கள். பிள்ளைகளும் தந்தையின் சொல் கேட்டு அதன்படி செயலாற்றி வந்தனர்.
