வடக்கு - கிழக்கு தொடருந்து சேவை ஸ்தம்பிதம்!

Sri Lanka Upcountry People Sri Lanka Railways Northern Province of Sri Lanka Department of Railways Railways
By Fathima Dec 11, 2025 05:31 AM GMT
Fathima

Fathima

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்துக்கான தொடருந்து சேவையை எப்போது மீள ஆரம்பிப்பது என்று குறிப்பிட முடியாத அந்தளவுக்கு தொடருந்து பாதைகள் சேதமடைந்துள்ளன என தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் கடந்த மாதம் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த தொடருந்து பாதைகள், பாலங்கள் தற்போது புனரமைக்கப்படுவது தொடர்பில் ஊடகங்களிடம் குறிப்பிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடருந்து சேவை

அவர் மேலும் தெரிவித்ததாவது, "இலங்கையில் இயற்கை அனர்த்தங்களால் தொடருந்து திணைக்களச் சொத்துகளுக்கு 300 மில்லியன் டொலர் வரையில் சேதம் ஏற்பட்டுள்ளது.

வடக்கு - கிழக்கு தொடருந்து சேவை ஸ்தம்பிதம்! | North Eastern Railway Damage

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு ஆகிய இயற்கை அனர்த்தங்களால் சகல பிரதேசங்களுக்குமான தொடருந்து பாதைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளன.

தொடருந்து சேவைகள் தற்போது வரையறுக்கப்பட்ட வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

ரம்புக்கனை, பொல்காஹெவல ஆகிய பகுதிகளின் தொடருந்து பாதைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து இந்தப் பகுதிகளுக்கான அலுவலக தொடருந்து சேவைகள் நேற்று புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்துக்கான தொடருந்து சேவை எப்போது மீள ஆரம்பிக்கப்படும் என்று குறிப்பிட முடியாது. மலையகத்துக்கான தொடருந்து பாதைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன.

மண்சரிவு அபாய எச்சரிக்கை 

குறிப்பாக மாத்தளை – கண்டி தொடருந்து பாதைகள் மிகவும் மோசமாகச் சேதமடைந்துள்ளன. மலையக தொடருந்து பாதைகள் மற்றும் பாலங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பீடுவதற்கு இன்னும் 2 மாதங்களேனும் செல்லும்.

வடக்கு - கிழக்கு தொடருந்து சேவை ஸ்தம்பிதம்! | North Eastern Railway Damage

மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஒருசில பகுதிகளுக்குச் செல்ல முடியாத நிலைமை காணப்படுகின்றது.

இயற்கை அனர்த்தங்களால் தொடருந்து திணைக்களத்தின் சொத்துகளுக்கு (பாலம், வீதிகள், சமிஞ்சை கட்டமைப்பு, தொடருந்து நிலையங்கள்) 300 மில்லியன் டொலர் வரையில் சேதம் ஏற்பட்டுள்ளது.

தொடருந்து சேவையை இயலுமான வகையில் வழமைக்குக் கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்."என தெரிவித்துள்ளார்.