ஞானசாரரை விடுவிக்க மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்தார்களா..! நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்டுள்ள தகவல்

Sri Lanka Cabinet Galagoda Aththe Gnanasara Thero Cabinet Decisions
By Mayuri Oct 27, 2026 12:53 PM GMT

கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு மகாநாயக்க தேரர்கள் இதுவரை அரசாங்கத்திடம் எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என அமைச்சர நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (27.10.2026) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் சட்டத்திற்கு அமைவாகவே செயற்படும்

அவர் மேலும் தெரிவிக்கையில், மகாநாயக்க தேரர்கள் விடுதலை தொடர்பில் கோரிக்கை விடுத்தாலும், அரசாங்கம் நாட்டின் நடைமுறையிலுள்ள சட்டத்திற்கு அமைவாகவே செயற்படும். சட்டத்திற்கு மேலாகச் சென்று எந்தவொரு மாற்றத்தையும் மேற்கொள்ள அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை.

இதேவேளை, ஞானசார தேரர் தொடர்பில் முப்பீட மகாநாயக்க தேரர்கள் சிறைச்சாலை ஆணையாளருக்கு முன்னர் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், சிறைச்சாலையின் நிலையான கட்டளைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த கடிதம் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, மகாநாயக்க தேரர்களின் பிரதிநிதிகளான அனுநாயக்க தேரர்கள் மற்றும் பதிவாளர் தேரர்களுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஞானசாரரை விடுவிக்க மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்தார்களா..! நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்டுள்ள தகவல் | Nalinda Jayatissa Statement About Ganasara Tero

சிறைச்சாலையின் நிலையான கட்டளை

இந்த கலந்துரையாடல்களின் பின்னரே சிறைச்சாலையின் நிலையான கட்டளைகளைத் திருத்துவது தொடர்பில் இணக்கம் எட்டப்பட்டது.

அதன்படி, தற்போது திருத்தப்பட்டுள்ள சிறைச்சாலை நிலையான கட்டளைகளுக்கு அமைவாகவே எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மேலும், அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் என்ற அடிப்படையிலேயே அரசாங்கம் செயற்படுகிறது.

நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை மாற்றும் வகையில் நீதிமன்றத்திற்கு மேலாகச் சென்று எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள அரசாங்கத்திற்கு எண்ணமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.