பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த முரளி 800 திரைப்படத்தின் முதல் பார்வை
பல சர்ச்சைகளை தோற்றுவித்திருந்த “முரளி 800” திரைப்படத்தின் முதல் பார்வை(First Look) வெளியாகியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கைப் படமான முரளி 800 திரைப்படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்குகிறார்.
மூவி டிரையின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படத்தில் ´ஸ்லம்டாக் மில்லியனர்´ படப்புகழ் நடிகர் மதுர் மிட்டல், முத்தையா முரளிதரனாக நடிக்கிறார்.
மேலும், மகிமா நம்பியார், நரேன், நாசர், வேல ராமமூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள் தாஸ், ஹரி கிருஷ்ணன், யோக் ஜேபி, சரத் லோகிதாஷ்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள திரைப்படம்
இப்படத்தின் படப்பிடிப்பு இலங்கை, சென்னை, கொச்சி, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டு தற்போது முடிவடைந்துள்ளது.
இதையடுத்து ´800´ படத்தின் முதல் தோற்ற போஸ்டர் முத்தையா முரளிதரனின் பிறந்த நாளான இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இதேவேளை, இதற்கு முன்னர் இந்த திரைப்படத்தில் தென்னிந்தியாவின் பிரபல நடிகரான விஜய் சேதுபதி நடிக்கவிருந்த நிலையில், அது தொடர்பில் எழுந்த பல சர்ச்சைகளை அடுத்து அவர் அந்த திரைப்படத்தில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.