யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து: 16 வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம், அளவெட்டி பகுதியில் மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதியதில், 16 வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (01) மாலை, தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லாகம் - அளவெட்டி வீதியில் இடம்பெற்றுள்ளது.
மூன்று பேர் பயணித்த குறித்த மோட்டார் சைக்கிள் மல்லாகம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மதிலுடன் மோதியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை
விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் உள்ளிட்ட மூவரும் பலத்த காயமடைந்து தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவரும் பின்னால் பயணித்த ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 16 மற்றும் 28 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் குண்டுகுளம் மற்றும் அச்சுவேலி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் காவல் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.