பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை பௌத்த துறவிக்கு அவுஸ்திரேலியாவில் 13 ஆண்டுகள் சிறை

Australia Buddhism
By Dharu Oct 08, 2026 11:30 AM GMT

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள பௌத்த விகாரையில் ஆறு சிறுமிகளை பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக இலங்கையை சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவருக்கு 13 ஆண்டுகள் மற்றும் 2 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மெல்போர்னின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தம்ம சரண பௌத்த விகாரையில் பிரதம பிக்குவாக பணியாற்றிய 71 வயதான நாவத்துன்ன விஜித்த தேரருக்கே மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா மாகாண கவுண்டி நீதிமன்றம் நேற்று (8) அவருக்கு தண்டனை விதித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீவிரமான நம்பிக்கைத் துரோகம் 

தேரர் மீது கடந்த 2025ஆம் ஆண்டு 17 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. அவற்றில் குழந்தைகளுடன் பாலியல் ஊடுருவல் தொடர்பான 9 குற்றச்சாட்டுகளும், குழந்தைகளிடம் அநாகரிகமான செயலில் ஈடுபட்டது தொடர்பான 8 குற்றச்சாட்டுகளும் அடங்குகின்றன.

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை பௌத்த துறவிக்கு அவுஸ்திரேலியாவில் 13 ஆண்டுகள் சிறை | Monk Sentenced To 13 Years In Prison In Australia

இந்த குற்றச்செயல்கள் 1994 முதல் 2002ஆம் ஆண்டு வரை, மெல்போர்னின் Springvale மற்றும் Keysborough பகுதிகளில் இயங்கிய கோயில் வளாகத்தில் இடம்பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மத நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காக தங்களது குடும்பத்தினருடன் வந்த சிறுமிகளை, விஜித தேரர் தனது தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனை வழங்கிய நீதிபதி பர்தீப் திவானா, இந்த குற்றங்கள் மிகவும் தீவிரமான நம்பிக்கைத் துரோகம் எனக் குறிப்பிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் விவரித்துள்ளன.

இலங்கை பௌத்த சமூகத்தில் மதிப்பிற்குரிய பதவியில் இருந்ததை பயன்படுத்தி, பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் கோயிலில் பாதுகாப்பாக இருப்பார்கள் என வைத்திருந்த நம்பிக்கையை குற்றவாளி மீறி செயற்பட்டதாக செய்ததாக நீதிபதி தெரிவித்த்துள்ளார்.

இந்த சம்பவங்கள் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீண்டகால உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

பாதிக்கப்பட்ட சிலர், இன்றளவும் மத நடைமுறைகளுடன் தொடர்புடைய சில விடயங்களை எதிர்கொள்ளும்போது மன உளைச்சலை அனுபவித்து வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.