ஞானசார தேரர் காவியுடை களையப்படும் காட்சி நேரலையில்..! வெடித்த சர்ச்சை - பற்ற வைத்த உதய கம்மன்பில

Government Of Sri Lanka Sri Lankan Peoples Aswasuma
By Thulsi Oct 14, 2026 05:24 AM GMT

கலகொட அத்தே ஞானசார தேரரின் காவியுடை களையப்படும் காட்சியை அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் பார்வையிடுவதற்காக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தனது கைப்பேசி ஊடாக நேரலையில் காண்பித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஞானசார தேரரின் ஆடை தொடர்பான சர்ச்சை குறித்து உதய கம்மன்பில முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் முறையான காவல்துறையினரால் விசாரணை நடத்தப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஞானசார தேரர் தனது எதிர்ப்பையும் மீறி சிறை அதிகாரிகள் தனது ஆடையை வலுக்கட்டாயமாக அகற்றியதாக தன்னிடம் கூறியதாக உதய கம்மன்பில குற்றம் சாட்டி இருந்தார். மேலும் தேரர் சிறை ஆடையை அணிய வற்புறுத்தப்படுவதைக் காண்பிப்பதற்காக அதிகாரிகளில் ஒருவர் செல்வாக்கு மிக்க ஒருவருக்கு காணொளி அழைப்பு விடுத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார் 

இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டை உதாசீனப்படுத்த முடியாது எனக் குறிப்பிட்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இது மிகவும் தீவிரமான குற்றச்சாட்டு என்பதால் விரிவான விசாரணை அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் காவல்துறையினரிடம் உத்தியோகபூர்வ முறைப்பாட்டைச் செய்த பின்னர், விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

உண்மையில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றதா, அது எவ்வாறு இடம்பெற்றது என்பன விசாரணைகள் மூலம் கண்டறியப்படும் எனத் தெரிவித்த அமைச்சர், உதய கம்மன்பில தாம் கண்டவை, கேட்டவை மற்றும் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களை விசாரணையின் போது காவல்துறையினரிடம்  சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.