ஈரானில் நடைபெறும் அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு மலாலா யூசஃப்சாய் ஆதரவு!
ஈரானில் நடைபெறும் அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு, நோபல் அமைதி பரிசு பெற்ற மலாலா யூசஃப்சாய் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளமான எக்ஸ்-இல் பதிவிட்டுள்ள மலாலா, “ஈரானில் நடைபெறும் போராட்டங்கள், பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது நீண்ட காலமாக விதிக்கப்பட்டுள்ள அரசின் கட்டுப்பாடுகளிலிருந்து தனித்து பார்க்க முடியாது.
கல்வி உட்பட பொது வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பெண்களின் சுதந்திரம் மறுக்கப்பட்டு வருகிறது.
மரியாதையுடன் வாழும் வாழ்க்கை
உலகம் முழுவதும் உள்ள சிறுமிகளைப் போலவே, ஈரானிய சிறுமிகளும் மரியாதையுடன் வாழும் வாழ்க்கையை விரும்புகிறார்கள்.
ஈரானின் எதிர்காலம் வெளிநாட்டு சக்திகளால் அல்ல, ஈரான் மக்களாலும், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் தலைமையாலும் தீர்மானிக்கப்பட வேண்டும் என மலாலா வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, ஈரான் அரசு, கடுமையான பொருளாதார நிலையை எதிர்த்து அமைதியாக போராடும் மக்களுக்கு ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஆனால் வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அந்த கலவரங்களுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் காரணம் என குற்றம்சாட்டியுள்ளது.
மலாலா யூசஃப்சாய், தனது சொந்த நாடான பாகிஸ்தானில் சிறுமிகளின் கல்விக்காக போராடியதற்காக, 2014ஆம் ஆண்டு 17 வயதில் நோபல் அமைதி பரிசு பெற்றார்.