லைலத்துல் கத்ரின் அடையாளங்கள்
ஹஜ்ரத் உப்பாதா இன்னுஸ் ஸாமித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் லைலத்துல் கத்ரு இரவை பற்றி கேட்டார்கள்.
அதற்கு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அது ரமலான் மாதத்தின் கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படையான இரவுகளில் 21 அல்லது 23 அல்லது 25 அல்லது 27 அல்லது 29 ஆகிய ஏதேனும் ஒரு இரவில் இருக்கிறது.
எந்த மனிதர் ஈமானுடனும் நன்மையைக் கருதியும் அந்த இரவில் வணக்கம் செய்கிறாரோ அவருடைய முந்திய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்.
மேலும் அந்த இரவின் அடையாளங்களில் ஒன்று அவ்விரவு மிகப் பிரகாசமானதாகவும், தெளிவானதாகவும், அமைதியானதாகவும் இருக்கும்.
அது அதிக உஷ்ணமானதாகவோ, அதிக குளிரானதாகவோ இருக்காது, பிரகாசமான சந்திரன் இருப்பதை போன்றிருக்கும்.
அவ்விரவின் சுப்ஹு நேரம் வரை வானிலுள்ள நட்சத்திரங்கள் ஷைத்தான்களின் மீது எறியப்படமாட்டா.
மேலும் அவ்விரவின் அடையாளங்களில் மற்றொன்று மறுநாள் காலையில் சூரியன் சுடரின்றி உதயமாகும். முற்றிலும் வட்டமானதாக பௌர்ணமி நிலவைப்போன்றிருக்கும், அன்றைய தினம் அந்த சூரியனுடன் ஷைத்தான் வெளிப்படுவதை அல்லாஹ் தடை செய்துள்ளான். (மற்ற நாட்களில் சூரியன் உதயமாகும் வேளையில் அந்த இடத்தில் ஷைத்தானும் தோன்றுகிறான்).
விளக்கம்
இந்த ஹதீஸில் முதலாவது கருத்து முன்னாலுள்ள அறிவிப்புகளில் கூறப்பட்டுள்ளது, இறுதியில் லைலத்துல் கத்ருடைய சில அடையாளங்கள் தெளிவாக கூறப்பட்டுள்ளன. அவற்றிற்கு விளக்கம் எதுவும் தேவையில்லை, இவை தவிர இன்னும் சில அடையாளங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக இந்த இரவிற்கு பிறகு காலையில் சூரியன் உதயமாகும் போது சுடர் மங்கலாக உதயமாகிறது என்ற அடையாளம் பல அறிவுப்புகளில் கூறப்பட்டுள்ளது.
அவ்வாறே எப்பொழுதும் காணப்பட்டும் வந்திருக்கிறது, இதைத்தவிர மீதியுள்ள அடையாளங்கள் கட்டாயமானவையாகவோ நிரந்தரமானவைகளோ இல்லை.
அப்தத்துப்னு அபீலுபாபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ”நான் ரமலான் மாதத்தின் இருபத்தேழாம் நாளன்று கடல் நீரை சுவைத்துப் பார்த்தேன் அது முற்றிலும் இனிப்பாக இருந்தது’ என்று கூறுகிறார்கள்.
அய்யூப் இப்னு காலித் ரஹமத்துல்லாஹி அலைஹி என்பவர்கள், எனக்கு ஒருநாள் குளிக்கும் அவசியம் ஏற்பட்டுவிட்டது, அப்பொழுது தான் கடல்நீரில் குளித்தேன், அது முற்றிலும் இனிப்பாக இருந்தது என கூறுகிறார்கள், அது ரமலான் மாதத்தின் இருபத்து மூன்றாம் நாளில் நிகழ்ந்த சம்பவம்.
”லைலத்துல் கத்ரு இரவில் எல்லாப் பொருட்களும் ஸஜ்தாச் செய்கின்றன. மரங்களும் பூமியின் மீது கீழே விழுந்து பிறகு தம்முடைய இடங்களில் நின்று கொள்கின்றன” என்று பெரியவர்கள் எழுதியுள்ளனர்.
ஆனால் இவ்வித நிகழ்ச்சிகள் எல்லோருக்கும் தெரியவருவதில்லை. கஷ்ஃப் என்னும் ஞானப்பார்வை உள்ளவர்களுக்கே தெரியவரும்.