ஜனாதிபதி அநுரகுமார சிறை செல்வது நிச்சயம் - ஐக்கிய மக்கள் சக்தி!
தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் முடிவடையும் 2030 ஆம் ஆண்டில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிச்சயமாகச் சிறை செல்வார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊழல் மற்றும் திருட்டுக்கு எதிராக நாடு முழுவதும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார, தற்போது அரசுப் பணத்தை விரயமாக்கவும் துஷ்பிரயோகம் செய்யவும் அனுமதித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த சட்டமீறலுக்காகவே அவர் எதிர்காலத்தில் தண்டனையை எதிர்நோக்குவார் என பிரசாத் சிறிவர்தன சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு அண்மைய உதாரணம் ஒன்றை விளக்க முடியும என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சிறைத்தண்டனை அனுபவிப்பது பொதுமக்கள் பணத்தை நேரடியாகத் தனது சொந்தப் பைக்குள் போட்டுக் கொண்டதற்காக அல்ல. தேர்தல் காலத்தில் அரசுப் பணத்தில் பொருட்களை விநியோகித்து, பொதுமக்கள் பணத்தை விரயமாக்கிய குற்றத்திற்காகவே அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது என லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அண்மையில் தெளிவுபடுத்தியிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக மஹிந்தானந்த, தான் போட்டியிடும் தேர்தல் ஒன்றின் போது இந்தப் பொருட்களை விநியோகம் செய்யவில்லை எனவும் பொருட்களை இலவசமாக பகிர்ந்தளித்த போது வேறு ஒருவர் போட்டியிடும் தேர்தல் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதே சட்ட முன்உதாரணத்தின் அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமாரவும் தண்டிக்கப்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதியமைச்சின் கணினி அமைப்பில் இடம்பெற்ற ஹேக்கர் தாக்குதலால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மக்கள் பணம் இழக்கப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் நிதியமைச்சராக ஜனாதிபதி அனுரகுமாரவே பொறுப்பில் இருக்கும் சூழலில், இந்த விவகாரத்தில் அவர் தவறாகச் செயல்பட்டுள்ளார் எனவும், மக்கள் பண இழப்பிற்கு அவரே முழுப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
"நாங்கள் அவரைப் பழிவாங்கும் நோக்கில் சிறைக்கு அனுப்பப் போவதில்லை. ஆனால், மக்கள் பணத்தை விரயமாக்கிய குற்றச்சாட்டில் மஹிந்தானந்தவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை முன்மாதிரியாகக் கொண்டு, 2030-இல் இந்த அரசு வீழும் போது அனுரகுமார 2032ம் ஆண்டில் நிச்சயமாகச் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்" என பிரசாத் சிறிவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.