யாழில் முற்றுகையிடப்பட்ட போதைப்பொருள் உற்பத்தி நிலையம்: தீவிர விசாரணையில் காவல்துறையினர்
யாழ்ப்பாணம் (Jaffna) - இணுவில் பகுதியில் முதல் முறையாக போதைப்பொருட்களை உற்பத்தி செய்யும் நிலையமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருளை விற்பனை செய்யும் கும்பலை தேடிச் சென்றபோது வீடொன்றில் இயங்கிய போதைப்பொருள் உற்பத்தி நிலையம் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, ஐஸ் போதைப்பொருளுடன் யாழ்ப்பாணத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து போதைப்பொருள் உற்பத்தி நிலையம் நேற்று(13) முற்றுகையிடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் உற்பத்தி
குறித்த நிலையம் இரசாயான ஆய்வு கூடத்தை போன்று வடிவமைக்கப்பட்டு இரசாயனங்களை பயன்படுத்தி போதைப்பொருள் உற்பத்தி நடைபெற்றதாக சட்ட வைத்திய அதிகாரி நேரில் சென்று பார்வையிட்டு இன்று(14) உறுதிப்படுத்தியுள்ளார்.
வாள்வெட்டு கும்பலொன்றில் இயங்கும் ஒருவருக்கு சொந்தமான வீட்டிலேயே குறித்த நிலையம் இயங்கியுள்ளதுடன் காவல்துறையினர் முற்றுகையிட்டபோது அங்கு எவரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
தீவிர விசாரணை
இந்நிலையில், போதைப்பொருள் ஆய்வுகூடத்தில் பிரதான குற்றவாளிகளை தேடி காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக விசாரணைகளை குறித்த காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் கொழும்பில் இருந்து இரசாயன பகுப்பாய்வு பிரிவினரை அழைத்து விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.