கிண்ணியாவில் வழமைக்கு திரும்பியது வைத்தியசாலை சேவைகள்!
சுகாதார அமைச்சினால் இணக்கம் காணப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு தழுவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த தொடர் தொழிற்சங்கப் போராட்ட அறிவிப்புகளுக்கு மத்தியிலும், இன்று (26) கிண்ணியா ஆதார வைத்தியசாலையின் சேவைகள் எவ்வித தடையுமின்றி வழமை போன்று முன்னெடுக்கப்பட்டன.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று (24) விடுத்த அறிவிப்பின்படி, இன்று முதல் நாடு தழுவிய ரீதியில் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்திருந்தது.
தொழிற்சங்க போராட்டங்கள்
கடந்த சில நாட்களாக கிழக்கு மாகாணம் உட்பட நாடு முழுவதும் வைத்தியர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 8 மணியுடன் நிறைவுக்கு வந்த நிலையில், மீண்டும் ஒரு தொடர் போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் இன்று காலை முதல் அனைத்துப் பிரிவுகளும் வழமை போன்று இயங்கியதை அவதானிக்க முடிந்தது.
குறிப்பாக, வெளிநோயாளர் பிரிவு (OPD), நீண்ட வரிசையில் காத்திருந்த நோயாளிகளுக்குத் தடையின்றி சிகிச்சையளிக்கப்பட்டது.
வாராந்த மற்றும் மாதாந்த கிளினிக் சிகிச்சைகளுக்காக வருகை தந்திருந்த முதியவர்கள் மற்றும் நீண்டகால நோயாளிகள் தமக்கான மருந்துகளைப் பெற்றுக்கொண்டனர்.
சேவைகள்
தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கான கவனிப்புகள் வழமை போல் அமைந்திருந்தன. கடந்த வாரம் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வேலைநிறுத்தப் போராட்டங்கள் காரணமாக, இப்பகுதி மக்கள் முறையான மருத்துவ வசதிகளின்றிப் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

இந்த நிலையில், இன்று வைத்தியசாலைச் சேவைகள் தடையின்றி இடம்பெற்றமை பொதுமக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
தொழிற்சங்கப் போராட்டங்கள் குறித்த அறிவிப்புகள் ஒருபுறமிருக்க, நோயாளிகளின் நலன் கருதி சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவது பாராட்டுக்குரியது எனச் சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.




