தாதியர் துறையில் இஸ்லாமிய பெண்கள் கலாசாரப்படி ஆடை அணிய ஹிஸ்புல்லா கோரிக்கை
தாதியர் துறையில் இஸ்லாமிய பெண்கள் தங்களுடைய கலாசாரத்துக்கு ஏற்ற வகையில் ஆடை அணிந்து பணியாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
தீர்மானம்
இருப்பினும், அரசதுறை தாதியர்களின் ஆடை விடயத்தில் இதுவரை எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில், எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவின் கோரிக்கைக்குப் பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அரச துறை தாதியர்களின் ஆடையை மாற்றுவது குறித்து இதுவரை எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை.

அவ்வாறு யாருக்கேனும் ஆடையை மாற்றுவதற்கான யோசனை இருந்தால் அதனை ஆடைத் தொடர்பான குழுவில் முன்வைக்குமாறு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.
அதற்கமைய, நடப்பு நிலவரங்கள் மற்றும் நடைமுறை சாத்தியங்கள் குறித்து ஆராய்ந்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையிலான ஆடைத் தொடர்பான குழு உரிய தீர்மானத்தை எடுக்கும் என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தாதியரின் ஆடைத் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவினால் 1992 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 7 ஆம் திகதி தனிநபர் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
தனிநபர் யோசனை
இந்த தனிநபர் யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனினும், தாதியர்களின் ஆடைக்கான அனுமதி தொடர்பான அறிக்கைகள் சுகாதார அமைச்சு வசமில்லை என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இந்த தனிநபர் யோசனை முன்வைத்து தற்போது 33 வருடங்களுக்கு மேலாகியுள்ளதுடன், இந்த யோசனை முன்வைக்கப்பட்ட பின்னர் பல்வேறு அரசாங்கங்கள் ஆட்சியிலிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த 33 வருடங்களில் அனுமதிக்கு அமைய ஆடை விடயம் நடைமுறைப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.
எனினும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையிலான ஆடைத் தொடர்பான குழுவே அரச சுகாதாரத் துறையில் பணியாற்றுவோரின் ஆடைத் தொடர்பான முடிவுகளை எடுக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, தனியார் துறை தாதியர்களின் ஆடைத் தொடர்பான முடிவுகளை, குறித்த குழு எடுக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.