முஸ்லிம் லீக் கட்சியின் முதல் பெண் MLA: பாத்திமா தஹ்லியா வரலாற்று வெற்றி
2026 கேரள சட்டமன்றத் தேர்தலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியின் வரலாற்றில் ஒரு புதிய அரசியல் மைல்கல்லாக, அக்கட்சியின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராக பாத்திமா தஹ்லியா தெரிவாகி சாதனை படைத்துள்ளார்.
தேர்தல் அரசியலில் பெண்களுக்குப் போதிய வாய்ப்புகளை வழங்குவதில்லை என்ற விமர்சனங்களை நீண்டகாலமாக முஸ்லிம் லீக் கட்சி எதிர்கொண்டு வந்தது.
இந்நிலையில், இந்த முறை களமிறக்கிய இரண்டு பெண் வேட்பாளர்களில் ஒருவரான பாத்திமா தஹ்லியா, கோழிக்கோடு மாவட்டத்தின் பெரம்பரா தொகுதியில் வெற்றிவாகை சூடியுள்ளார்.
இடதுசாரிகளின் கோட்டையாகக் கருதப்படும் பெரம்பரா தொகுதியில் போட்டியிட்ட 34 வயதான பாத்திமா தஹ்லியா, 81,429 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவர் டி.பி. ராமகிருஷ்ணனை 5,087 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, அவர் இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார். ராமகிருஷ்ணன் 76,342 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார்.
முஸ்லிம் லீக் கட்சியின் நீண்டகால அரசியல் வரலாற்றில் ஒரு பெண் சட்டமன்றத்திற்குத் தெரிவாகி இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.