முடிவுக்கு வரும் பொருளாதார நெருக்கடி..! ஜனாதிபதியின் உறுதி
2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பொருளாதார நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதே தனது நோக்கம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் கடவத்தை - மீரிகம பகுதியின் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கும் விழாவில் இன்று(17.09.2025) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“கட்டுமானத்தின் மூலம் மட்டுமே பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைய முடியாது. அது பல வழிகளில் அடையப்பட வேண்டும்.
அரசாங்க ஊழியர்களுக்கான ஒதுக்கீடுகள்
பொருளாதாரத்தின் பரவலான சரிவு மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் அதிகரித்த போதிலும் அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதனை முடிவுக்கு கொண்டு வருவதே எனது நோக்கமாகும்.
2026ஆம் ஆண்டில் அரசாங்க ஊழியர்களின் சம்பள கொடுப்பனவுக்காக 110 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட உள்ளது. 2027 ஆம் ஆண்டில் 330 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட உள்ளது.
இந்த ஒதுக்கீடுகளுக்கு ஏற்ப அரசாங்க ஊழியர்கள் சேவைகளை வழங்க வேண்டும் என்பதை வலியுத்துகின்றோம். ஒவ்வொரு துறையிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டுக்கான வருவாய் இலக்குகள் அடையப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்தை நெருங்கும்.
அந்நிய செலாவணி இருப்பு 7 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும். ஏற்கனவே 1 பில்லியன் டொலர் நேரடி முதலீட்டை நாங்கள் ஈர்த்துள்ளோம். மேலும் பல திட்டங்கள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.