திக்ரைப் பற்றிய திருவசனங்கள்
* ஆகவே நீங்கள் என்னை நினைத்து திக்ரு செய்யுங்கள். நான் உங்களை நினைத்து (அருள்புரிந்து) வருவேன். நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள். எனக்கு மாறு செய்பவர்களாக ஆகிட வேண்டாம்.
* உம்முடைய ரட்சகனை அதிகமாக திக்ரு செய்வீராக இன்னும் காலையிலும் மாலையிலும் அவனை தஸ்பீஹ் செய்வீராக
* அவர்கள் நின்ற நிலையிலும், உட்கார்ந்திருக்கும் நிலையிலும் படுத்திருக்கும் நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்வார்கள். வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப்பற்றி சிந்தித்து எங்கள் இரட்சகனே! நீ இவற்றை வீணானவையாக படைக்கவில்லை. ஆகையால் நரக வேதனையை விட்டும் எங்களை நீ காத்தருள்வாயாக! என்று கூறுவார்கள்.

* தங்கள் ரட்சகனின் திருப்பொருத்தத்தை நாடியவர்களாக காலையிலும் மாலையிலும் அவனை பிரார்த்திக் கொண்டிருப்பவர்களை நீர் விரட்டி விடாதீர்
* அவனுக்காகவே இந்த தீனை கலப்பற்றதாக்கி வைத்தவர்களாக அவனையே நீங்கள் அழைப்பீர்களாக
* அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. ஆகவே அவற்றை கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள்.
* எவர் அவன் பக்கம் திரும்புகிறாரோ, அவருக்கு அவன் நேர்வழி காட்டுகிறான். அவர்கள் தாம்(உண்மையில்) ஈமான் கொண்டவர்கள். அல்லாஹ்வை திக்ரு செய்வது கொண்டு அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறும். அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வை திக்ரு செய்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறும்.
* (நபியே) நீர் கூறுவீராக அல்லாஹ் என்று அழையுங்கள். அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள். எப்பெயர் கொண்டு (அவனை) நீங்கள் அழைத்தாலும் அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன.
* எவர்களுடைய கண்கள் என்னுடைய திக்ரை விட்டும் திரையிடப்பட்டு விட்டனவோ அத்தகைய காபிர்களுக்கு அந்த (கியாமத்து) நாளில் நரகத்தை நாம் மிக நெருக்கமாக்கி வைப்போம்.
* நிச்சயமாக நானே அல்லாஹ் என்னைத்தவிர வேறு நாயன் இல்லை. ஆகவே என்னையே வணங்குவீராக என்னை நினைவு கூர்வதற்காகத் தொழுகையை கடைப்பிடிப்பீராக நிச்சயமாக கியாமத்து நாள் வந்தே தீரும். ஒவ்வோர் ஆத்மாவும் செய்த செயலுக்கு கூலிவழங்கப்படுவதற்காக அந்நாளை மறைத்து வைக்க விரும்புகிறேன்.
* அல்லாஹ் என்னும் திருநாமம் கூறப்பட்டால் எவர்களுடைய இதயங்கள் நடுங்குமோ, அத்தகைய உள்ளச்சமுடையவர்களுக்கு (சொர்க்கத்தை கொண்டு) நற்செய்தி கூறுவீராக
* இரவின் கடைசிப்பகுதி அல்லாஹ்விடம் நெருங்குவதற்கு சிறந்த தருணமாகும். உனக்கு முடிந்தால் அந்த நேரத்தில் அல்லாஹ்வை திக்ரு செய்து கொள்

* அல்லாஹ்வை திக்ரு செய்வதை விட்டும் எவர்களுடைய இதயங்கள் கடினமாகிவிட்டனவோ அவர்களுக்கு கேடு தான், அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள்.
* எவன் ரஹ்மானுடைய திக்ரை விட்டு(புறக்கணித்து) கண்களை மூடிக் கொள்கிறானோ அவனுக்கு ஒரு ஷைத்தானை நாம் சாட்டிவிடுவோம். அப்பொழுது அவன் அவனுக்கு இணைபிரியா நண்பனாகி விடுவான்.
* எவர் தன் இரட்சகனை திக்ரு செய்வதை புறக்கணிக்கிறாரோ அவரை அவன் கடினமாக வேதனையில் நுழையச் செய்வான்.
* எவர் (தீமைகளை விட்டுப்) பரிசுத்தமாகி, தன்னுடைய இரட்சகனின் திருநாமத்தை திக்ரு செய்து அவனை தொழுதாரோ, அவர் உறுதியாக வெற்றியடைந்து விட்டார்.