அமெரிக்காவிலிருந்து இலங்கை திரும்பியவுடன் பசில் வெளியிட்ட அறிவிப்பு
மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வரும் எண்ணம் தமக்கு இல்லை என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பல மாதங்களாக அமெரிக்காவில் தங்கியிருந்த பசில் ராஜபக்ச இன்று (05.03.2024) காலை 8.16 மணியளவில் Emirates Airline விமானமான EK 650 இல் இலங்கை வந்தடைந்தார்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ரோஹித அபேகுணவர்தன மற்றும் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க ஆகியோர் விமான நிலையத்திற்குச் சென்று பசில் ராஜபக்சவை வரவேற்றனர்.
இந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பசில் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தேர்தல் ஏற்பாடு
அவர் மேலும் தெரிவிக்கையில், எமது கட்சி ஒருபோதும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கவில்லை. அத்துடன் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை.
எனினும் எந்த தேர்தல் நடந்தாலும் அதற்கான ஏற்பாடுகளை நான் செய்வேன். தேவையான இடங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என நம்புகிறேன். ஒவ்வொரு தேர்தலும் சவாலாகவே உள்ளது.
நாங்கள் மக்களை ஒருபோதும் ஏமாற்றுவதில்லை. மக்கள் சொல்வதைச் செய்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.