அயதுல்லா காமேனிக்காக உயிரை தியாகம் செய்ய மக்கள் தயார்! மூத்த மதகுரு ஷேக் ஈசா காசிம்
ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா காமேனிக்கு ஆதரவாக பஹ்ரைனின் மூத்த மதகுரு ஷேக் ஈசா காசிம் வெளியிட்டுள்ள அறிக்கை தற்பொழுது சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது.
சமீபத்தில் ஈரானியத் தலைவரை விமர்சித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது.
காமேனியின் வழிகாட்டுதல்
அயதுல்லா காமேனியின் ஆன்மீக மற்றும் அரசியல் ஆளுமையை வெகுவாகப் பாராட்டியுள்ள ஷேக் ஈசா காசிம், காமேனியின் வழிகாட்டுதலை மதத்தின் கட்டளையாக ஏற்றுக்கொண்டு அவருக்காகத் தங்கள் உயிரையும் தியாகம் செய்ய ஈரானில் லட்சக்கணக்கான மக்கள் தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளார்.

ஈரானில் சமீபத்தில் நடந்த கலவரங்களுக்குப் பின்னால் அமெரிக்காவின் தூண்டுதல் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், அந்நாட்டு மக்கள் வெளிநாட்டுச் சதித்திட்டங்களுக்குப் பலியாகாமல் தங்கள் தலைவருக்குப் பின்னால் உறுதியாக நிற்பதை சமீபத்திய பேரணிகள் உறுதிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஈரானியத் தலைவருக்கு ஆதரவாகத் திரண்டுள்ள இந்த மக்கள் சக்தியும் சர்வதேச ஆதரவும் அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரானிய தரப்பு பணியாது என்பதையே காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.