அத்துருகிரிய கொலைச் சம்பவம்: விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள்
அத்துருகிரியவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 7 பேரும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துருகிரிய சந்தியில் பச்சை குத்தும் நிலையத்தில் கிளப் வசந்த என்ற சுரேந்திர வசந்த பெரேரா என்பவரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 சந்தேகநபர்களும் இன்று காலை கடுவல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
பொலிஸார் கோரிய அனுமதி
சம்பவம் தொடர்பான உண்மைகளை நீதிமன்றில் அறிக்கையிடவுள்ளதால் சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு அத்துருகிரிய பொலிஸார் அனுமதி கோரினர்.
சந்தேகநபர்கள் அஹுங்கல்ல, பலப்பிட்டிய, கணேமுல்ல, அம்பலாங்கொட மற்றும் பெலியத்தர ஆகிய பகுதிகளில் வசிக்கும் 24 முதல் 37 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் காலை அத்துருகிரிய சந்தியில் பச்சை குத்தும் நிலையமொன்றைத் திறந்து வைப்பதற்காக வந்த சுரேந்திர வசந்த பெரேரா எனும் வர்த்தகர் உள்ளிட்ட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |