விபத்தில் சிக்கிய முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல மனைவி!

Accident Ashoka sapumal rangwalla
By Fathima Jan 17, 2026 07:35 AM GMT
Fathima

Fathima

முன்னாள் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் மனைவி இந்திராணி ரன்வல ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு எமது ஊடகத்திற்கு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த விபத்து இன்று (17) காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களின்படி, இந்திராணி ரன்வல ஓட்டிச் சென்ற கார் மற்றொரு காருடன் மோதியதில் அவர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பியகம பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் சம்பந்தப்பட்ட மற்றொரு காரை ஓட்டிச் சென்றவர், இசைக்குழு ஒன்றின் முன்னணி கிட்டார் கலைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி – பியகம சாலையில் அமைந்துள்ள அசோக சபுமல் ரன்வல எம்.பி.யின் வீட்டின் முன்பாக இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் விசாரணைகளின்படி, பண்டாரவட்டாவில் இருந்து சாலையின் வலது பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த எம்.பி.யின் மனைவி ஓட்டிச் சென்ற கார், வீட்டிற்குள் திரும்பும் போது, களனியிலிருந்து பண்டாரவட்ட நோக்கிச் சென்ற புரோட்டான் வகை காருடன் மோதியுள்ளது.

பியகம – கொழும்பு சாலையில் உள்ள அசோக சபுமல் ரன்வலவின் வீட்டில் இரவு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கான்ஸ்டபிள் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிச் சென்ற, களுத்துறை வடக்கு ஜாவத்த பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பரிசோதனையில் அவர் மது அருந்தியிருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தேக நபர் மஹர நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

பியகம பொலிஸ் நிலைய தலைமை ஆய்வாளர் ஏ.கே.எம். விஜேசிங்கவின் வழிகாட்டலின் கீழ், போக்குவரத்துப் பிரிவு பொலிஸார், சார்ஜென்ட் 34895 உபாலி உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.