கிரிக்கெட் வீரர் அரவிந்தவின் 4 கோடி ரூபா அரசுடமையாக்கப்படுகிறது
முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் சுமார் நான்கு கோடி ரூபா அரசுடமையாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய எயார்பஸ் விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான, ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலியின் பிணைப் பணத்தை அரசுடைமையாக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசந்த அமரசேன இன்று உத்தரவிட்டுள்ளார்.
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளில் குறித்த சந்தேகநபர் தொடர்ந்து நீதிமன்றில் முன்னிலையாகாது நீதிமன்றத்தைப் புறக்கணித்து வந்தார்,

இதனால் அவரைக் கைது செய்வதற்காக நீதிமன்றத்தினால் ஏற்கனவே பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. முன்னதாக, தலா 20 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அவருக்காகப் பிணையாளர்களாக முன்வந்திருந்த முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியாங்கி நியோமாலி வீரநாயக ஆகியோர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
இதன்போது பிணையாளர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, குறித்த பிணைத் தொகையில் 20 மில்லியன் ரூபாவை இன்றைய தினமே நீதிமன்றத்தில் செலுத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
முன்வைக்கப்பட்ட அனைத்துக் காரணிகளையும் பரிசீலித்த கோட்டே நீதவான், உறுதியளித்தபடி 20 மில்லியன் ரூபா தொகையை இன்றைய தினமே நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும், எஞ்சிய 20 மில்லியன் ரூபா பிணைப் பணத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தி முடிக்குமாறும் பிணையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.