ஊழல்கள் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்: அருண் ஹேமச்சந்திரா தெரிவிப்பு
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் கடந்த காலத்தில் அபிவிருத்தி பணிகளின் போது நடைபெற்ற ஊழல்கள் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா (Arun Hemachandra) தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (30) இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்ட 725மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் 25மில்லியன் ரூபாக்களாக பிரிக்கப்பட்டு எந்தவித ஒப்பந்த விண்ணப்பங்கள் கோரல்களும் இல்லாமல் வேலைத்திட்டங்கள் முறைகேடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரச அதிகாரிகளிடம் கோரிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது ஆட்சியில் எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்காது, அதனையும் மீறி அரசியல் ரீதியாக எமது பெயரை கூறிக்கொண்டு யாரும் வந்தால் உடனே எமக்கு அறியத்தாருங்கள் எனவும் அருண் ஹேமசந்திரன் அரச அதிகாரிகளிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.
இதன் போது மாவட்டத்தில் இடம்பெற்றதாக கருதப்படும் காணி மோசடிகள், விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி விடயங்கள், ஏனைய அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்கள் தொடர்பாகவும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திப்பது தொடர்பாக அபிவிருத்தி குழுத் தலைவர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோரினால் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டது.
அத்துடன், சில விடயங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக உப குழுக்கள் நிர்ணயிக்கப்பட்டதுடன், அவர்களின் பரிந்துரைகளுக்கு அமைய முடிவுகள் எடுக்கப்பட்டும் என தீர்மானம் எட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |