பலஸ்தீனத்தில் போரால் பாதிக்கப்பட்ட 54 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்!
பலஸ்தீனத்தில் போரால் பாதிக்கப்பட்ட 54 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசாவின் கான் யூனிஸ் பகுதியில், வெடிகுண்டு தாக்குதல்களால் சேதமடைந்த கட்டட இடிபாடுகளுக்கு நடுவே மேடை அமைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் பலஸ்தீனத்தை சேர்ந்த 54 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
பலஸ்தீன கொடிகளை ஏந்திய நிலையில் திருமணம்
பொது மக்கள் மத்தியில் மணமக்கள் தங்கள் கையில் பலஸ்தீன கொடிகளை ஏந்திய நிலையில் திருமணம் செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது.
அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டது. 2 ஆண்டுகள் நடந்த போரில் காசாவில் 70 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
நெருக்கடி சூழல்
இந்த போரால் காசா முழுவதுமாக உருக்குலைந்து போனது. இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்காக தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

காசாவில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடி சூழலை கருத்தில் கொண்டு போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலுக்கு சர்வதேச நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் முயற்சியால் கடந்த அக்டோபர் 10 ஆம் திகதி இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
இதனை தொடர்ந்து, காசா மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க ஐ.நா. சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
