தொழுபவருக்காக தொழுகை செய்யும் துஆ
ஹஜ்ரத் அனஸ்(ரலி) அவர்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழியை அறிவிக்கிறார்கள்:
ஒருவர் தொழுகையை அதன் உரிய நேரத்தில் தொழுகிறார். ஒலுவையும் அழகிய முறையில் செய்கிறார்.
உள்ளச்சத்துடனும், ஓர்மையுடனும் தொழுகின்றார். அவர் நிலை நிற்பதும் கம்பீரத்துடன் இருக்கிறது. அதே போன்று ருகூவு சுஜூதையும் நன்கு அமைதியுடன் நிறைவேற்றுகிறார்.
ஆக ஒவ்வொரு நிலையையும் நிரப்பமாக நிறைவேற்றுகிறார் என்றால் அத்தொழுகை மிக்க பிரகாசமும் ஒளியும் பெற்று அத்தொழுகையாளிக்காக
”என்னை நீ பாதுகாத்ததை போன்று அல்லாஹீதஆலாவும் உன்னையும் பாதுகாப்பானாக! என்ற துஆ செய்த வண்ணம் செல்லுகிறது.
மாறாக ஒருவர் தொழுகையை அருவருப்பான முறையில் நேரந்தவறி தொழுகிறார். ஒலுவையும் சிறந்த முறையில் செய்யவில்லை, பயபக்தியுடன் தொழுகவில்லை. ருகூஉ, சுஜூதையும் நன்கு நிறைவேற்றவில்லையென்றால் அத்தொழுகை அருவருப்பான கருப்பு நிறமுடையதாக மாறி
”நீ என்னை பழுதாக்கியது போன்று அல்லாஹ்வும் உன்னை வீணாக்குவானாக” என்று பத்துஆ செய்த வண்ணம் செல்கிறது.
அதற்கு பிறகு அத்தொழுகையானது பழைய துணியை போன்று சுருட்டி தொழுதவருடைய முகத்தில் வீசி எறியப்படுகிறது.
விளக்கம்
அழகிய முறையில் தொழக்கூடிய அம்மக்களே பெரும் பாக்கியசாலிகள். ஏனெனில் அல்லாஹ்வின் மாபெரும் வணக்கமான தொழுகை அவர்களுக்காக துஆ செய்கின்றது.
வேறொரு ஹதீஸிலும், ” உள்ளச்சமும் ஓர்மையும் கொண்டு தொழப்பட்ட ஒருவரின் தொழுகைக்காக வானத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு அது மிக்க ஒளி பொருந்தியதாக மாறிவிடுவதுடன் அத்தொழுகையாளிக்காக அல்லாஹ்விடம் சிபாரிசும் செய்கிறது” என கூறப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் அருள தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
எவரொருவர் ஐவேளைத் தொழுகைகளையும் அவற்றிற்குரிய நேரங்களை பாதுகாத்தவராக ஒலுவை நிரப்பமாக செய்து உள்ளச்சத்துடனும், ஓர்மையுடனும் நிறைவேற்றிய நிலையில் கியாமத் நாளன்று ஆஜராவாரோ அவரை வேதனை செய்யப்படமாட்டாது என அல்லாஹ் வாக்களித்துள்ளான்.
மேலும் அவர் அத்தகைய தொழுகைகளுடன் ஆஜராகமாட்டாரோ அவருக்காக எத்தகைய வாக்குறுதியும் கிடையாது.
நாடினால் அல்லாஹ் தனது கிருபையால் மன்னித்துவிடலாம். நாடினால் வேதனை செய்யலாம்.
